Karur Stampede: கரூர் 40 பேர் மரணத்துக்கு முக்கிய காரணம் இதுதான்! மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்
கரூர்: கரூரில் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு முதன்மைக் காரணம் மூச்சுத்திணறல் என உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் 40 பேர் பலியாகினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய. அரசியல் கட்சிக் கூட்டத்தில் நடந்த மிகப்பெரிய கோரச் சம்பவமாகப் பதிவாகியுள்ளது இந்த நிகழ்வு. இந்தச் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தமது விசாரணையை தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி கரூரில் இன்று கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கரூர் துயரச் சம்பவ பலி குறித்து விளக்கம் அளித்தார். தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் சுகந்தி ராஜகுமாரி கரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரூர் வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. கரூர் அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை மொத்தம் 52 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 2 பேர் நிலைமை மட்டுமே கவலைக்கிடமாக உள்ளது. மற்றவர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்.
உடற்கூராய்வு அறிக்கையில் பெரும்பாலானவர்கள் இறப்பிற்கு காரணம் மூச்சுத்திணறல் (Asphyxia) என உறுதியாகி உள்ளது. உடற்கூறு ஆய்வுக்காக மட்டும் 16 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 60 முதல் 70 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதவிர சேலம், ஈரோடு, மதுரை ஆகிய இடங்களில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் வந்துள்ளனர். அவர்களும் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுதவிர கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications