“தப்பு பண்ணிட்டீங்க”.. எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஏ.வி.ராஜு.. பஞ்சாயத்து தீரல!
சென்னை: அண்மையில் கூவத்தூர் பற்றிய பேச்சால் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, ஏ.வி.ராஜுவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு விரோதமாக, அதிமுகவின் ஒழுங்கை குலைக்கும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி, சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜுவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதையடுத்து சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.” என்றார்.
மேலும் பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்த போது எவ்வளவு ஊழல் செய்தார் என்பதை வெளியிடட்டுமா? பால் கடத்தல் செய்தது, நெய்யை கடத்தியது போன்ற ஊழல்களைச் செய்ததை சொல்லவா? எடப்பாடி பழனிசாமி பால் பண்ணை தலைவராக இருந்த போது, நான் இயக்குனராக இருந்தேன். எனவே அவர் செய்த ஊழல் அனைத்தும் எனக்குத் தெரியும்” என்றும் தெரிவித்தார்.
பால் பண்ணை ஊழலை வெளியிடட்டுமா? எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் விடுத்த நிர்வாகி! அதிமுகவில் ஷாக்!
இந்நிலையில், ஏ.வி.ராஜு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "என்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்பது குறித்து விளக்கப்படவில்லை. மேலும், அதிமுக உட்கட்சி விதிப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் நேரடியாக நீக்கியது தவறு. எனவே, என்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் நிர்வாகியான ஏ.வி.ராஜூ, கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த சம்பவங்கள் எனக் கூறி பேசியது தமிழ்நாடு முழுக்க அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications