பால் பண்ணை ஊழலை வெளியிடட்டுமா? எடப்பாடி பழனிசாமிக்கு மிரட்டல் விடுத்த நிர்வாகி! அதிமுகவில் ஷாக்!
சேலம்: எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்த போது செய்த ஊழல் பட்டியலை வெளியிடட்டுமா என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் பல கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்து இருப்பதாக சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, ஏ.வி.ராஜுவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடிக்கு தெரியவில்லை. கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.
கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்க பொதுச் குழு உறுப்பினரான நான் கையெழுத்து போட்டு உள்ளேன். பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியை பணத்தோடு வரும் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே சந்திக்க முடிகிறது. அவர் அதிமுக தொண்டர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து போட்டதற்கு நான் இப்போது வெட்கப்படுகிறேன்.
என்னை நீக்கியது போல அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்க முடியுமா? அப்படி 2 மா.செக்களை நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவியே பறிபோய்விடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்த போது எவ்வளவு ஊழல் செய்தார் என்பதை வெளியிடட்டுமா? பால் கடத்தல் செய்தது, நெய்யை கடத்தியது போன்ற ஊழல்களைச் செய்ததை சொல்லவா? எடப்பாடி பழனிசாமி பால் பண்ணை தலைவராக இருந்த போது, நான் இயக்குனராக இருந்தேன். எனவே அவர் செய்த ஊழல் அனைத்தும் எனக்குத் தெரியும்" என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஏ.வி.ராஜு, "300 சதுர அடி சொத்து வைத்திருந்த சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாலசம் தற்போது பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து அதிமுகவை ஏமாற்றி வருவது தொடர்பாக பொதுச் செயலாளரிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாப் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தேன். இதுவரை அது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. இவர் எப்படி பொதுச் செயலாளராக இருக்கிறார்?
மாநகர மாவட்ட செயலாளருக்கு 1000 கோடி சொத்து இருப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை பார்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பினாமியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுகவில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை. மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து பட்டியலை வைத்து விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். வருமான வரித்துறையிடமும் புகார் தெரிவிப்பேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications