ஜெயிலிலேயே இருங்க.. தவெக எம்எல்ஏவிடம் குதிரைபேர வழக்கில் ஜாமீன் கேட்ட 3 பேருக்கு கோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைதான 3 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 3 பேரின் மனுக்களும் அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழகத்தில் நடக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கலைக்க முயற்சிகள் நடப்பதாக அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தவெக எம்எல்ஏக்களிடம் இதற்காக பேரம் பேசப்படுவதாகதும் அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. ரூ.35 கோடி வரை தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு தவெக எம்எல்ஏ இளையராஜா மயங்கவில்லை. மாறாக தன்னிடம் பேரம் பேசியவர்கள் பற்றி அவர் சென்னை திருவல்லிக்கேணி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் வழக்கில் கைதான நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் அரசியல் காரணங்களுக்காக தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை கூறும் குற்றச்சாட்டிற்கும், எங்களுக்கும் சம்பந்தம் கிடையாது என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இப்போது ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் நிலை வரலாம். இதனால் ஜாமீன் வழங்க கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ் கார்த்திகேயன் காவல்துறை வாதத்தை ஏற்றார். மனுதாரர்களின் தரப்பு வாதத்தை ஏற்கவில்லை. இதனால் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவர்களின் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் அவர்கள் 3 பேரும் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
