இரண்டு கவிஞர்களால் முடியவில்லை..ஒரே இரவில் கலைஞர் எழுதி ட்யூன்.. -மலரும் நினைவுகள்
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து 5 ஆண்டுகள் கரைந்துபோய் விட்டன. இந்திய அரசியலில் ஏறக்குறைய 80 ஆண்டு காலம் அவர் சோர்வே இல்லாமல் மிகக் கடுமையாக உழைத்தார் அவர்.
அரசியல் கொள்கைக்காக நாடகம், சினிமா, இலக்கியம் என அனைத்து துறைகளையும் பயன்படுத்தியவர். அதில் வென்றும் காட்டியவர்.

இவரது காலத்தில் புராணகால மூடத்தனங்களால் நிரம்பி வழிந்த, சினிமா துறையைப் பகுத்தறிவு அரசியல் பக்கம் திருப்பி விட்டவர். இவரது வசனத்தில் வெளியான 'பராசக்தி' இந்தியத் திரைப்படங்களில் புதிய அலையை உருவாக்கியது.
ஏவி.எம். ஸ்டுடியோவும் நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்த இந்தப் படம்தான், சிவாஜி கணேசன் என்ற சிறந்த நடிகரைத் தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது.

2006இல் நடைபெற்ற ஏவி.மெய்யப்பன் அஞ்சல்தலை வெளியிட்டு விழாவில் பேசிய மு.கருணாநிதி, "அந்தக் காலத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோ முழுக்க கீற்றுக் கொட்டகைகள்தான். சிறுகக் கட்டி, பெருகவாழ் என்பார்கள். அதற்கு உதாரணம் ஏவி.மெய்யப்பன் செட்டியார். இங்கே இருந்த 10 ஆம் நம்பர் கொட்டகையில் உட்கார்ந்துதான் ஒரே இரவில் அண்ணா 'ஓர் இரவு' திரைக்கதையை எழுதி முடித்தார். அதை நினைத்தால் என் உள்ளம் பூரிக்கிறது" என்று பாராட்டிப் பேசினார்.

இதே ஸ்டுடியோ 75 ஆம் ஆண்டு பவள விழாவின் போது "ஏவி.எம். என்றாலே தரமான படங்களை நாட்டுப் பற்றுள்ள படங்களை வழங்கியவர்கள் என்பதை மக்கள் தானாகவே உணர்வார்கள்" என்று சொன்னவர் மு.கருணாநிதி.

இப்படி ஏவி.எம். என்ற மூன்று எழுத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் மு.கருணாநிதி. அவரைப் பற்றி எம்.சரவணனிடம் சில நினைவுகளைக் கேட்டுப் பெற்றோம்.
"சின்ன வயதிலிருந்து நான் அவரைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். சொல்லப்போனால் அவரது வசனங்களை எல்லாம் பேசி பள்ளிப்பருவத்தில் பரிசுகளைக் கூட வாங்கி இருக்கிறேன். 1950 ஆம் ஆண்டு எங்கள் ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு வேலை பார்ப்பதற்காக முதன்முதலாக வந்தார்.

நேஷனல் பிக்சர்ஸ் மற்றும் ஏவி.எம். ஸ்டுடியோ கூட்டுத் தயாரிப்பில் உருவான 'பராசக்தி' படத்தில் பணிபுரிவதற்காக வந்தார். அன்று முதல் எங்கள் நிறுவனத்துடன் அவருக்குத் தொடர்பு, வியாபாரத்தைத் தாண்டி இருந்துவருகிறது.
இந்தியாவிலேயே மிகப் பழமையான ஸ்டுடியோ எங்களுடையது. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இயங்கி வருகிறது. அந்த ஸ்டுடியோ தொடர்ந்து நடைபெறப் பல பேர் காரணமாக இருந்துள்ளனர். அதில் ஒருவர் கலைஞர் கருணாநிதி.

அவரிடம் நான் பார்த்துவியந்த விஷயம் என்றால், யார் அவரைப் பார்க்க வந்தாலும் எழுந்து நின்று வணங்கி வரவேற்பார். அவரது உடல்நிலை மாறி, அவர் நடக்க முடியாமல் போகும் வரை இதை அவர் விடாமல் கடைப்பிடித்தார். அவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்ற பிறகு, பண்புள்ளவராக அவர் இருந்தார். அப்படிப் பட்ட இன்னொரு மனிதரைப் பார்ப்பது மிகமிக கஷ்டம்.
எனக்கு ஒருமுறை சிறியதாக ஒரு விபத்து நடந்தது. அப்போது நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தேன். அதைப் பற்றி செய்தித்தாளில் சின்னதாக ஒரு செய்தி போட்டுவிட்டார்கள். அதைப் படித்துவிட்டு, உடனே மருத்துவமனைக்கு போன் செய்து என் குடும்பத்தினரிடம் விசாரித்திருக்கிறார்.
அந்தச் செய்தி என்னை எட்டுவதற்குள் மருத்துவமனை உதவியாளர் ஒருவர் ஓடிவந்து, உங்களைப் பார்ப்பதற்காகக் கலைஞர் கிளம்பி வந்துகொண்டிருக்கிறார் என்றார். அப்போது அவர் முதலமைச்சர். என்ன நடந்தது என தொலைபேசியில் விசாரித்திருந்தாலே போதும். எதிர்பார்த்ததைப் போலவே சக்கரநாற்காலியில் வந்தார்.

வந்தவர், "முகச்சவரம் செய்ய உட்கார்ந்தேன். அப்போது சண்முகநாதன் செய்தியைக் கொண்டுவந்து காட்டினார். மனம் கேட்கவில்லை. உடனே கிளம்பி வந்துவிட்டேன்" என்கிறார்
'பராசக்தி' படத்தில் 'பூமாலை நீயே புழுதி மண் மேலே' என்ற பாடல் ஹிந்தி ட்யூனில் இருந்து எடுத்தது. ஆகவே அதற்குத் தகுந்த மாதிரி அன்றைய காலத்திலிருந்த இரண்டு கவிஞர்களால் எழுத முடியவில்லை.

ட்யூனை மாற்றிவிடலாம் எனப் பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அதை வேண்டாம் எனக் கூறி, அதன் தத்தக்காரத்தை மட்டும் எழுதிக் கொடுங்கள் என இசையமைப்பாளர் சுதர்சனத்திடம் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றவர், அன்று இரவே எழுதி மறுநாள் காலை பாடலைக் கொண்டுவந்து கொடுத்தார்.
இந்தியாவில் இவர் அளவுக்குப் பல துறைகளில் வல்லவராக இருப்பவர்கள் மிகமிகக் குறைவு. பத்திரிகையாளர், நாடகம், திரைக்கதை வசனம், கவிதை, நாவல், சிறுகதை, அரசியல், மேடைப்பேச்சு என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய சகலகலா வல்லவர் கலைஞர்தான்" என்கிறார்.












Click it and Unblock the Notifications