அன்று சிரஞ்சீவி.. இன்று விஜய்.. இத்தனை ஒற்றுமைகளா? ரிசல்ட் எப்படி இருக்கும்?
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் சிரஞ்சீவி ஆரம்பித்த பிரஜா ராஜ்யத்திற்கும் இடையே சில நெருக்கமான ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் களத்தில் யாரும் எதிர்பார்க்க அளவு விஜய்க்கு மக்கள் ஆதரவு இருப்பதைக் காண முடிகிறது. அவர் போகும் இடங்களில் எல்லாம் இளைய தலைமுறை வாக்காளர்கள் தன் எழுச்சியாக வந்து குவிகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் ஆட்களைத் திரட்ட, பணம் கொடுப்பது என்ற கலாச்சாரம் தலைதூக்கிவிட்ட காலத்தில், இந்தளவுக்கு மக்கள் கூடுவார்கள் என யாருமே நம்பவில்லை. நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்பதாகவே உள்ளது. இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் ஆந்திராவில் கடந்த 17 ஆண்டுகள் முன்பு சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்யம் கட்சிக்கும் பல ஒப்புமைகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. அது என்ன?

சிரஞ்சீவி ஆந்திரா திரைப்பட உலகில் மெகா ஸ்டாராக இருந்தபோது கட்சியை அவர் தொடங்கினார். அதாவது 2008இல் அவரது பிரஜா ராஜ்யம் உருவானது. விஜய்யும் தன் திரை வாழ்க்கையில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் காலத்தில் தன் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். சிரஞ்சீவி 'சமூக நீதி' என முழக்கத்தையும் அரசியலில் 'மாற்றம்' தான் தான் என்றும் முன்வைத்தார். அதாவது ஊழலற்ற நிர்வாகம் என்பதே சிரஞ்சீவியின் கொள்கையாக ஒலித்தது.
அவர் 2008இல் திருப்பதியில் கூட்டிய மாநாடு, இந்திய அரசியல்வாதிகளை அதிகமாகவே கலங்கடிக்கும்படியாக இருந்தது. விஜய்யின் விக்கிரவாண்டி மாநாடும் அவரது அரசியல் செல்வாக்கை உறுதி செய்கின்றதைப் போன்றே அமைந்தது. சிரஞ்சீவியின் டார்கெட் இளைஞர்கள். விஜய்யின் டார்கெட்டும் இளைஞர்கள்தான். அவர் 'தாய்மார்களே பெரியோர்களே' என்று பேசவில்லை. 'நண்பா, நண்பீஸ்' என மாடர்ன் ஆக பேசிவருகிறார்.
மாநில ஆட்சியை எதிர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார் விஜய். மத்திய அரசைக் கண்டும் காணாமல், இன்னும் அழுந்தச் சொன்னால், பட்டும் படாமல் பேசிவருகிறார். இதே நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடித்தார் சிரஞ்சீவி.
ஆந்திர அரசியலில் 'தெலுங்கு தேசம்', 'காங்கிரஸ்' என்ற இருமுனைவாத அரசியலே இருந்த நிலையைச் சிரஞ்சீவி மாற்றினார். பிரஜா ராஜ்யம் இந்த இரு கட்சிகளுக்கும் சவால் விடும் அளவுக்கு உயர்ந்தது. இங்கு அதிமுக, திமுக என்ற இரண்டு அரசியல் சக்திகளை எதிர்த்து தவெகவை முன் வைக்கும் விஜய், திமுக மற்றும் தவெக இடையேதான் போட்டி என்றும் பேசி வருகிறார்.
சிரஞ்சீவிக்கும் விஜய்க்கும் உள்ள ஒற்றுமைகள்?
விஜய்யின் பக்கம் நிற்பவர்கள் 18 வயது முதல் 30 வயது வரையிலான வாக்காளர்கள். அரசியலில் முன் அனுபவமே இல்லாத கூட்டத்தினர். மேலும் நாட்டில் ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடு என்ன? என்பதைக் கூட அறியாதவர்கள். சுருக்கமாகச் சொன்னால், பிரதமருக்கும் முதல் அமைச்சருக்கும் வேறுபாடு தெரியாத விடலைகள்.
விஜய்க்குப் பெண்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. வயதானவர்கள் கூட அவரை ஆதரிப்பதைக் கவனிக்க முடிகிறது. ஒரு ஃபேமிலி இமேஜ் உள்ளவராக விஜய் இருக்கிறார். இந்த Silent Vote Swing ஆனது தேர்தல் அரசியலில் முக்கியமான மாற்றத்தை உண்டாக்கக் கூடியது. இதேபோல் பெண்கள் மத்தியில் சிரஞ்சீவிக்கும் செல்வாக்கு பெருகி இருந்தது.
திருப்பதி தாரிகரி மைதானத்தில் 10 லட்சம் பேர் கூடினார்கள். அவர் பிரஜா ராஜ்யம் கட்சியின் பெயரை அறிவித்து, பொதுக்கூட்டங்கள் நடத்த ஆரம்பித்த பிற்பாடு ஆந்திராவில் ஒரு அலையே வீசியது. தவெக விக்கிரவாண்டி மாநாட்டில் சுமார் 8 லட்சம் பேர் கூடி இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டது. அதாவது மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைய முடியாமல் வெளியே 3 லட்சம் பேர் காத்திருந்ததாகக் கூறப்பட்டது. இந்த இருவர் கூட்டிய மாநாட்டால், மாநிலத்தின் போக்குவரத்து முடங்கியது.
2008இல் சிரஞ்சீவியின் கட்சி 18 இடங்களில் வெற்றிபெற்றது. விஜய் போலவே தனித்து கூட்டணி இல்லாமல் களம் கண்டார் சிரஞ்சீவி. எப்படி விஜய்யின் கட்சிக்கு இன்னும் முறையான கட்டமைப்பு கிராமப்புறங்களில் உருவாக்கப்படவில்லையோ அதே மாதிரியே சிரஞ்சீவியின் கட்சிக்கு அடித்தளம் வலுவாக இல்லை. அனைவரும் ரசிகர்களாக இருந்தனரே தவிர, அரசியல் அனுபவம் கொண்டவர்களாக இல்லை.
ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என முதலில் நம்பிய சிரஞ்சீவி, தன்னால் 18 சீட்டுகள் மட்டுமே கைப்பற்ற முடிந்ததால், இறுதியில் காங்கிரஸ் கட்சியுடன் கட்சியை இணைத்துவிட்டு அமைதியாகி விட்டார்.
சிரஞ்சீவி கட்சியை உருவாக்கும் போது ஆந்திரா ஒன்றுபட்டு இருந்தது. மிகப்பெரிய மாநிலமாக இருந்தது. அவரை கம்மா, ரெட்டி சாதியினர் ஆதரிக்கவில்லை. ஆந்திர அரசியலில் மாற்றம் வேண்டும் எனில் இந்த வகுப்பினரின் உதவியில்லாமல் அது நடக்காது.
ஆனால், சிரஞ்சீவி சார்ந்திருந்த காப்பு சமூகம் அவரை பலமாக ஆதரித்தது. இவர்களும் எண்ணிக்கையில் பலம் வாய்ந்த சமூகத்தினர். பெரிய சினிமா நட்சத்திரமாக இருந்தாலும், அவரை தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் ஆதரிக்கவில்லை. எனவே கட்சியின் வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சிரஞ்சீவி சீட்டுக் கொடுத்தார். அது அவரது செல்வாக்கைச் சரித்தது. கிட்டத்தட்ட விஜய்யின் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களும் பணம் கொடுத்து சீட்டு வாங்கியதாகப் பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. ஆதவ் அர்ஜுனா முன்பு திமுகவின் புரவலராக இருந்தார். பின் விசிகவுக்கு பணம் செலவழித்தார். இப்போது விஜய் பக்கம் வந்துள்ளார்.
சொல்லப்போனால் சிரஞ்சீவி அளவுக்குச் சட்டமன்ற உறுப்பினர் சீட்டுகளை விஜய் ஏலம் விடவில்லை. அவருக்குத் தமிழகம் முழுவதும் போட்டியிடுவதற்கு ஆட்கள் இருந்தனர். தங்களுக்குச் சீட்டு கிடைக்கவில்லை என மோதிக் கொள்ளும் அளவுக்குச் செல்வாக்கு கட்சிக்கு உள்ளது. இருந்தாலும் சிரஞ்சீவி அளவுக்கு 18 சீட்டுகளை விஜய் வெல்ல முடியாது என்றே பலரும் கணிக்கின்றனர். ஒருவேளை காங்கிரஸ் அவர் பக்கம் சென்றிருந்தால் சில மாற்றங்கள் வந்திருக்கலாம் என்பதும் கணிப்பாக உள்ளது.
சிரஞ்சீவி அளவுக்கு விஜய்யின் சாதி பின்புலம் பலமாக இல்லை. அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளனர். ஆனால், சிறுபான்மை மக்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்கலாம். விஜயகாந்த்திற்குச் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் கிடைத்ததால்தான், அவர் விருத்தாசலத்தில் வெல்ல முடிந்தது. அதேபோல் விஜய் சிறுபான்மை மக்கள் அதிகம் வாழும் பெரம்பூரைத் தேர்வு செய்துள்ளார்.
எழுதியவர்: கடற்கரய்
-
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத் -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
லீக்கான ‘ஜனநாயகன்’.. இஸ்லாமியர்களுக்கு எதிரான வசனங்கள்.. பற்றிக்கொண்ட நெருப்பு.. விஜய்க்கு செக்! -
பிரச்சார வாகனத்தில் இருந்து திடீரென சைக்கிளுக்கு தாவிய விஜய்.. காரைக்குடியில் சூழ்ந்த தவெகவினர்! -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி -
'காப்பி-கேட்' கிங்? அரசியலிலும் ரஜினி பாணி.. பாடலை வாரி சுருட்டி விஜய்? -
Jana nayagan: லீக் ஆன ஜனநாயகன் படம்.. இயக்குநர் ஹெச் வினோத்தின் உருக்கமான பதிவு! வெளியான அதிர்ச்சி தகவல் -
வெயிலில் காத்து கிடந்த தவெக தொண்டர்களுக்கு ஏமாற்றம்.. காரைக்குடி பரப்புரையில் பேசாமல் கிளம்பிய விஜய் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்! -
விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம்.. மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. ப்ளூ சட்டை மாறன் -
இந்த கட்சி லிஸ்ட்லயே இல்லை.. 10 சதவீதம் ஓட்டு வாங்கப்போறதே அவுங்ககிட்ட இருந்துதான்-ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications