மாஸான திட்டம்! ஆனா இங்கதான் சிக்கலே! "ஏமாத்துறாங்க!”.. வரிந்து கட்டி வரும் எதிர்க்கட்சிகள்.. போச்சே!
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தும், அதற்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் காரணமாக முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியைக் குறிப்பிட்டு, மக்களை ஏமாற்றுவதாக விமர்சித்து வருகின்றனர்.
திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி துவக்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இத்திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரை தமிழ்நாடு அரசு சூட்டியுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் ரூபாய் 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெறிமுறைகள்: மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறும் திட்டத்திற்கு தகுதியானவர்கள் யார் யார் என்பது குறித்தும் சமர்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள் குறித்தும் அறிவிப்பு வெளியானது. சொந்தமாக கார், டிராக்டர், ஜீப், கனரக வாகனம் வைத்திருப்போர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது. ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களில் உள்ள மகளிருக்கு உரிமைத் தொகை கிடையாது என நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் இந்த நிபந்தனைகள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன. குறிப்பாக குடும்ப வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என்ற நிபந்தனை பெரும்பாலானோரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும், திமுக அரசு, குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, இப்போது இத்தனை நிபந்தனைகளை விதிப்பதா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்ணாமலை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், "வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது.
நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதி படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
அறிவிப்பது ஒன்றும், செயல்படுத்துவது வேறாகவும் இருப்பதே திமுக அரசின் பாரம்பரிய நடைமுறை என்பது இந்த விஷயத்திலும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆகவே வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சீமான்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், "மகளிருக்கு 1000 ரூபாய் என இவர்கள் அறிவித்துவிட்டு இப்போது கண்டிஷன் போடுகிறார்கள். எந்த குடும்பத் தலைவியாவது இவர்களிடம் எங்களுக்கு மாதம் ரூ.1000 கொடுங்கள் என கேட்டார்களா? இவர்களாகவே அறிவித்துவிட்டு இப்போது நிலம் இருக்கக் கூடாது, வீடு இருக்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? இதெல்லாம் அந்த மக்களை அவமானப்படுத்தும் செயல். இவர்கள் கொடுக்கும் ரூ 1000 உதவித்தொகையை பெற பிச்சைக்காரியா இருக்கணும் போல!" என விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணசாமி: புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "மகளிருக்கு 1000 ரூபாய் என வாக்குறுதிகள் கொடுத்தனர். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதுதான் மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். இது மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியைப் பாதிக்கும். ஓட்டு வாங்கும்போது ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு இப்போது அதற்கு நேர் எதிராகச் செயல்படுகின்றனர்." எனக் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதலில் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. முதலில் வரட்டும் பின்பு பதிலளிக்கிறேன். பல்வேறு தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அரசு அதனை முறையாக செயல்படுத்துகிறதா என்பதை பார்க்கலாம்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அரசுக்கு சிக்கல்: பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வரும் 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தும் பணிகளை வேகப்படுத்தினாலும், திமுக தனது வாக்குறுதியில் இருந்து விலகி கடுமையான நிபந்தனைகளை விதித்து பெண்களுக்கு 1000 வழங்க மறுப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களால் திமுக அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், நெறிமுறைகளில் மாற்றம் வருமா? எவ்வளவு பயனாளிகள் உண்மையிலேயே பயன் பெறுவார்கள் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications