Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிகப்பெரிய ‘ரிஸ்க்’.. “வந்தா மலை”.. பெரும் தலைகளை ‘பணயம்’ வைக்கும் பாஜக தலைமை! பிளானே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக இந்த லோக்சபா தேர்தலில் 'ரிஸ்க்' மேல் ரிஸ்க் எடுத்துள்ளது. வலுவான கூட்டணி இல்லாத நிலையில், மத்திய அமைச்சரான ராஜ்யசபா எம்.பி எல்.முருகன், ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்: கடந்த நான்கரை ஆண்டு காலமாக தெலங்கானா ஆளுநராகவும், 3 ஆண்டுகளாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதி தமிழிசை தான் வகித்துவந்த இரு மாநில ஆளுநர் பதவிகளையும் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

BJP has taken very big risk top leaders on lok sabha election field

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே தமிழிசை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் களம் காண இருப்பதாக கூறப்பட்டது. அதன்படியே, தற்போது தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வசதியான ஆளுநர் பதவியை துறந்துவிட்டு: ஆளுநர் மாளிகை வசதியானது. தெலுங்கானாவில் 300 ஊழியர்கள், என்னை சுற்றி 5 சேவை பெண்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்வை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருகிறேன். அதில் அன்பை புரிந்து கொள்ளுங்கள். எனது ஆளுநர் பதவி காலம் இன்னும் உள்ளது. வசதியான வாழ்வை விட்டு மக்கள் சேவை செய்ய போகிறேன். மக்கள் புரிந்துகொள்வார்கள் எனக் கூறி இருந்தார் தமிழிசை சௌந்தரராஜன்.

பாஜக மட்டுமல்லாது தமிழிசை சௌந்தரராஜனும் மிகப்பெரிய ரிஸ்க்கை எடுத்துள்ளார். 2006ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன் இதுவரை வென்றதே இல்லை. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தான் அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடியின் கனிமொழி கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றார்.

இந்நிலையில், 2 மாநிலங்களில் ஆளுநராக கோலோச்சிவிட்டு, ஆளுநராக இருப்பதால் கிடைக்கும் சகல வசதி வாய்ப்புகளையும் உதறிவிட்டு மீண்டும் அரசியல் களம் கண்டுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை அழுத்தமாக பதிவு செய்து விடும் நோக்கத்தில் ஆளுநராக இருந்த தமிழிசை அழைத்து வந்து களத்தில் இறக்கியுள்ளது பாஜக தலைமை.

எல்.முருகன்: மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது மாநில பாஜக தலைவராக பதவி வகித்தார். அப்போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றி வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சரும் ஆனார். அவரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ளதை அடுத்து மீண்டும் அவர் ராஜ்யசபா வேட்பாளராக, மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், நீலகிரி (தனி) தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஜ்யசபா எம்.பி + மத்திய அமைச்சர் : நீலகிரி தொகுதியை குறி வைத்து கடந்த 2 ஆண்டு காலமாக வேலை செய்து வந்தார் எல்.முருகன். ஆ.ராசாவை எதிர்த்து எல்.முருகன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்.முருகனை மீண்டும் ராஜ்யசபா எம்.பி ஆக்கியது பாஜக தலைமை. இதனால், அவர் லோக்சபா போட்டியில் இருந்து விலகுவார் எனக் கருதப்பட்டது. இந்தச் சூழலில் தான் லோக்சபா தேர்தலிலும் களமிறக்கப்பட்டுள்ளார் எல்.முருகன்.

எல்.முருகனின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி இன்னும் 6 ஆண்டுகள் உள்ள நிலையில், லோக்சபா தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார் எல்.முருகன். ஒருவேளை இந்த தேர்தலில் எல்.முருகன் வெற்றி பெற்றால் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு லோக்சபா எம்.பியாக பதவியேற்க வேண்டி இருக்கும். ஒருவேளை அவர் தோல்வியடைந்தால், பாஜக மத்திய அமைச்சர் தோல்வி என்ற விமர்சனத்தை பாஜக சுமக்க வேண்டியிருக்கும்.

நயினார் நாகேந்திரன்: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பாஜகவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அவர் இருந்து வருகிறார்.

நயினார் நாகேந்திரனின் எம்.எல்.ஏ பதவி காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுமையாக உள்ளது. நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு லோக்சபா சீட் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரனையே வரும் மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் களமிறக்கியுள்ளது பாஜக.

சிட்டிங் எம்.எல்.ஏ: நெல்லை தொகுதியில் அதிமுக மற்றும் வலுவான கூட்டணி கட்சிகளின் துணையுடன் தான் கடந்த 2021ல் எம்.எல்.ஏ ஆனார் நயினார் நாகேந்திரன். நீண்ட காலத்திற்கு பிறகு சட்டசபையில் 4 பேராக நுழைந்தது பாஜக. இப்போது அதிமுகவும் கூட்டணியில் இல்லாத நிலையில், வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இறங்குகிறது பாஜக. எனினும், எம்.எல்.ஏவான நயினார் நாகேந்திரன் துணிந்து இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளார்.

அண்ணாமலை: பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்து வரும் அண்ணாமலை, லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் என தொடர்ந்து கூறி வந்தார். தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காகத்தான் நான் வந்துள்ளேன், டெல்லிக்கு செல்லும் திட்டம் இல்லை எனக் கூறி வந்தார் அண்ணாமலை.

பாஜகவின் மாநில தலைவராக பதவியேற்றது முதல் பாஜகவை தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சென்று 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

பணயம் வைக்கும் பாஜக: அண்ணாமலையின் வருகைக்குப் பிறகு பாஜக தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்துள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தார் அண்ணாமலை. இந்நிலையில் தான் தற்போது அண்ணாமலை கோவையில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என்ற போக்கில் சென்று கொண்டிருந்தவரை இந்த லோக்சபா தேர்தலில் களம் இறக்கியுள்ளது பாஜக தலைமை. அண்ணாமலை இதில் வென்றால் அண்ணாமலைக்கும் மைலேஜ் கிடைக்கும், பாஜகவுக்கும் லாபம் என்பது உண்மை. ஒருவேளை அண்ணாமலை இந்த தேர்தலில் தோற்றால், 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி என அண்ணாமலை முன்வைக்கும் முழக்கத்திற்கும், அண்ணாமலையின் இமேஜுக்கும் டேமேஜ் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பாஜக தலைமை பிளானே வேறு: எனினும், இவை அத்தனையையும் கடந்து, பாஜக தேசிய தலைமையின் பிளானே வேறு எனக் கூறப்படுகிறது. இந்த லோக்சபா தேர்தலை, தமிழ்நாட்டில் பாஜகவின் பலத்தைக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறது பாஜக தலைமை. பெரும் தலைகளை களமிறக்குவதன் மூலம், கூடுதலாக வாக்குகளைப் பெறலாம் என எதிர்பார்க்கிறது.

தமிழ்நாட்டில் தங்கள் வாக்கு சதவீதம் 25 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து விட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கூறி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்க வேண்டும். அதிமுக கூட்டணியை விட அதிக வாக்கு சதவீதத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் பாஜக தலைமையின் திட்டம்.

அதனால் தான், மத்திய அமைச்சர் எல்.முருகனையும், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து தமிழிசை சௌந்தரராஜனையும், சிட்டிங் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனையும், 2026 முதல்வர் வேட்பாளராக தயாராகும் அண்ணாமலையையும் தேர்தல் களத்தில் நேரடியாக இறக்கி விட்டுள்ளது பாஜக தேசிய தலைமை எனக் கூறப்படுகிறது. பாஜகவின் இந்த திட்டங்கள் வொர்க் அவுட் ஆகுமா? தலைகள் தப்புமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+