ஆவின் விலை உயர்வு.. அண்ணாமலையை வந்து மீட் பண்ணுங்க.. நிர்வாகத்தை அவர் சொல்லி தருவார்! கரு. நாகராஜன்
சென்னை: பால் விலை உயர்வுக்கு எதிராக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கரு.நாகராஜன், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. பல ஆண்டுகளுக்குப் பின் மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதேபோல ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலையும் சில்லறை விற்பனையில் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட் 12 ரூபாய் உயர்த்தப்பட்டது.

ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே பால் விலை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாடத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், கட்டண உயர்வுகள் குறித்தும் விமர்சிக்கப்பட்டது.

கரு.நாகராஜன்
இந்த ஆர்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கரு.நாகராஜன், "ஆவின் பால் விலையை ஏற்றி உள்ளார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். வேண்டுமென்றால் ஆவின் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலையைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஐடியா கேட்கட்டும், அண்ணாமலை நிறைய ஐடியாக்களை தருவார்.

பாஜகவிடம் கேளுங்கள்
ஆவின் மிக்ஸ் இப்போது தான் தயாரிக்கும் நிலைக்கு வந்துள்ளது. அதற்கு ஐடியா தந்தவரே எங்கள் தலைவர் அண்ணாமலை தான். ஆவின் தயாரிக்கும் ஸ்வீட்களை அரசு ஊழியர்களுக்கே கொடுக்கலாம். முதலில் அரசுத் துறைகளில் பொங்கல், தீபாவளிக்கு ஸ்வீட் வழங்க டெண்டர் விட்டு வெளியில் இருந்து தான் வாங்குவார்கள். ஏன் ஆவின் நிறுவன ஸ்வீட்களை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் கேட்ட பிறகு தான் இந்த எண்ணமே அவர்களுக்கு வந்தது.

அண்ணாமலையிடம் கேளுங்கள்
நஷ்டத்தைத் தவிர்க்கப் பால் விலையை 12 ரூபாய்த்தியதாக கூறி இருக்கிறார்கள். அதற்குப் பதிலாக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், அவரே ஐடியா கொடுத்திருப்பார். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் திமுக நிச்சயம் தோல்வியைத் தான் சந்திக்கும். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். சென்னை கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பிற்கு அரசே காரணம்.

அலட்சியம்
மருத்துவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதால் பிரியா கால் நீக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஆனால், அமைச்சரோ கூலாக பேட்டி தருகிறார். பெரிய கனவுடன் இருந்த அந்த வீராங்கனை உயிரிழந்துள்ளார். இது எவ்வளவு பெரிய தவறு.. ஆனால், இரு டாக்டர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றும் அவர்களின் கவனக் குறைவு உயிரிழப்பு காரணம் என்றும் அமைச்சர் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய அநியாயம்" என்றார்.

கேள்வி
சம்மந்தப்பட்ட டாக்டர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற தவறுகள் இனியும் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார் மேலும், இது தான் திராவிட மாடல் அரசா என்றும் அவர் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.












Click it and Unblock the Notifications