கண் சிவந்த நட்டா.. தமிழ்நாட்டில் பாஜகவினரை அச்சுறுத்தும் திமுக அரசு? விரைகிறது 4 பேர் கொண்ட குழு!
சென்னை: பாஜக தொண்டர்கள் மீது திமுக அரசு திட்டமிட்டு காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதாகவும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் தமிழக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை தமிழகம் அனுப்புகிறது பாஜக தேசிய தலைமை.
சென்னை பனையூரில் அமைந்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் அருகே இருந்த 45 அடி உயர கம்பத்தில், கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நேற்று பாஜக ஏற்பாடு செய்திருந்தது. உரிய அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் மாநகராட்சியினர் கொடிக்கம்பத்தை அகற்றுவதற்கு ஜேசிபி உடன் வந்தனர்.

அப்போது பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த ஜேசிபி இயந்திரத்தையும் கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.
அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக நிர்வாகி ஒருவரின் மண்டை உடைந்த நிலையில் பாஜகவினரை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்ததுடன் அங்கிருந்த கொடிக்கம்பத்தையும் அகற்றினர். தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பாஜகவினர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜகவினர் மீது திமுக அரசு, திட்டமிட்டு காவல்துறை அடக்குமுறையை ஏவுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தேசிய தலைமைக்கும் தகவல்கள் பறந்தன. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவின் பேரில் தேசிய பொதுச் செயலாளர் அர்ஜுன் சிங் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் திமுக அரசு தமிழக பாஜகவினர் மீது காவல் துறையினை ஏவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, எம்.பி சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, பாஜக எம்.பி மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "ஊழல் நிறைந்த திமுக அரசின் கொடூரமானநடத்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 4 பேர் கொண்ட தூதுக்குழு அமைத்துள்ளதற்கு நமது தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு தமிழ்நாடு பிஜேபி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக அரசு பாசிசப் போக்கை மட்டுமே காட்டி வருகிறது.
1. தமிழ்நாடு பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, அற்பமான குற்றச்சாட்டுகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. பெரும்பாலான வழக்குகள் உள்ளூர் திமுக செயல்பாட்டாளர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன. ஊழல் திமுக அமைச்சர்களின் ஈகோவை திருப்திப்படுத்த காவல்துறை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
3. நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, 41ஏ சம்மன் அனுப்பாதது, ஜாமீன் கோரிம்போது புதிய அற்பமான குற்றச்சாட்டுகளை சுமத்துவது, வார இறுதி நாட்களில் அல்லது நீண்ட அரசு விடுமுறைக்கு முன் அவர்களை கைது செய்வது இந்த கொடூர திமுக அரசின் செயல்பாடாகும்.
4. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு அறியப்படுகிறது, ஆனால் தமிழ்நாடு பாஜக சார்பில் தாக்கல் செய்யும் உண்மையான புகார்களை கண்டுகொள்வதில்லை.
கடந்த 30 மாதங்களில் இந்த தி.மு.க அரசாங்கத்தின் அத்துமீறல்களையும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததையும் இந்த தூதுக்குழு வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications