"திராவிட மாடல் என்பதே இந்திய மாடலின் ஓர் அங்கம் தான்.." காரணத்தையும் பளீச் என சொன்ன வானதி சீனிவாசன்!
சென்னை: இன்று சட்டசபையில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திராவிட மாடல் என்றால் என்ன என்பது குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, 159 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின்னர், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

திமுக அரசு ஓராண்டு
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பதவி ஏற்றார், இதையடுத்து நேராகத் தலைமைச் செயலகத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு இலவச பஸ் போக்குவரத்து, பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசினார்.

ஒத்துழைப்பு அளிப்போம்
இதையடுத்து சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசியதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "திமுக அரசின் ஓராண்டு நிறைவுக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்திற்கு ஏற்ப, தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பாஜக தனது ஒத்துழைப்பை அளித்து வருகிறது.

குறுக்கிட்ட சாபாநயகர் அப்பாவு
இதனை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும் பாஜக நிச்சயம் எடுக்கும்" என்றார். தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மத்திய அரசும் பிரதமர் மோடியும் அளித்த திட்டங்கள் குறித்துப் பேச வானதி சீனிவாசன் முற்பட்டார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "110 விதியின் கீழ் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது. நன்றி தெரிவித்து மட்டும் பேசுங்கள். மத்திய அரசு பற்றிப் பேச வரும் 9ஆம் தேதி வாய்ப்பு தருகிறேன்" என்றார்.

திராவிட மாடல்
இதையடுத்து தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், "திராவிட மாடல் என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி வருகிறார். திராவிட மாடல் என்றால் அது தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உள்ளடக்கியது தான். திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் தான்" என்று சட்டசபையில் பேசினார்.












Click it and Unblock the Notifications