தமிழக வரலாற்றில் முதல்முறையாக எந்த அரசியல் தலைவரும் செய்யாததை நான் செய்ய போகிறேன்.. அண்ணாமலை
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனது வாழ்க்கையைத் தமிழக மக்களுக்கு திறந்து காட்ட போகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி போட்டிருக்கும் ஓவர்கோட்டின் விலை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டீ சர்ட்டின் விலை என போய் கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதாவது அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை ரூ 3.45 லட்சம் ரூபாய் என்றும் அது ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தினுடையது என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

கோவையில் பேட்டி
இந்த வாட்ச் விவகாரம் குறித்து அண்ணாமலையிடமே கோவையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இந்த வாட்ச் ரபேல் நிறுவனத்தின் வாட்ச். நான் தேசியவாதி, அதனால் இந்தியாவில் தயாரித்த வாட்ச்சை கட்டியுள்ளேன். ரபேல் விமான உதிரிபாகங்களால் தயாரிக்கப்பட்டது. இந்த வாட்ச் உலகில் 500 பேரிடம் மட்டுமே இருக்கும். அதில் நான் 149 ஆவது ஆள்.

வாட்ச்
என் உடலில் உயிர் இருக்கும் வரை நான் இந்த வாட்ச்சை கட்டியிருப்பேன் என தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த வாட்ச்சின் ரசீதை ஒரு மணி நேரத்தில் வெளியிட்டால் ஏழை எளிய மக்களும் வாங்கி பயனடைவோமே என ட்விட்டரில் கெடு விதித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாட்ச்சின் ரசீது என்னிடம் உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அந்த பயணத்தின் முதல் நாள் அன்று எனது சொத்து மதிப்பை நான் நிச்சயம் வெளியிடுவேன். இது போல் திமுக அமைச்சர்களும் வெளியிட தயாரா என அண்ணாமலை எதிர் சவால் விடுத்திருந்தார்.

செந்தில் பாலாஜி
அதற்கு செந்தில் பாலாஜி, உங்கள் சொத்து கணக்கெல்லாம் அரவக்குறிச்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலில் இருக்கும். நான் கேட்டது வாட்சின் ரசீது மட்டுமே என கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் பாஜக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:

முதல்முறையாக கிறிஸ்துமஸ் விழா
இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் என்ற விழாவை பாஜக முதல் முறையாக நடத்திக் கொண்டிருக்கிறது. 190 காலகட்டத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக அரசியலும் மதமும் இணைக்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக, தேர்தலுக்காக மதம் என்பது உள்ளே வந்துவிட்டது. நான் மேடையில் இருக்கிறேன், ஜீயர் மேடையில் இருக்கிறார். ஷேக் தாவூத் மேடையில் இருக்கிறார். ஜெய்சிங் மேடையில் இருக்கிறார்.

அடையாளங்கள்
அவர்களுடைய மத அடையாங்களை என் மேல் நான் போட்டுக் கொண்டதால்தான் செக்யூலரா. நான் நானாக இருப்பேன், அவர்கள் அவர்களாக இருப்பார்கள். அவரவர் மதத்தையும் பாரம்பரியத்தையும் அவரவர்கள் பின்பற்றுவதுதான் மதசார்பின்மை. தமிழகத்தில் சாதி அரசியல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்க மாட்டோம். அனைத்து மதத்திலிருந்தும் பாஜகவுக்கு தலைவர்கள் வருவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை பாஜக தமிழகத்தில் ஏற்படுத்தும். நான் கவுன்சிலரோ, ஊராட்சி மன்ற தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ நாடாளுமன்ற உறுப்பினரோ இல்லை, அரசு பணத்தில் இருந்து தற்போது ஒரு ரூபாய் கூட எனக்கு வருமானம் இல்லை. ஆனாலும் என்னிடம் திமுக ஒரு கேள்வி கேட்டுள்ளது. திமுகவினர் எனது உடைகள், கடிகாரம், கார் குறித்து கேள்வி கேட்பதை நான் வரவேற்கிறேன். இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். இந்திய அரசியலில் யாரும் செய்யாததை ஒரு மாநிலத் தலைவராக நான் செய்ய போகிறேன்.

விரைவில் நடைப்பயணம்
தமிழகம் முழுவதும் விரைவில் பாஜக சார்பில் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். அனைத்து தொகுதிகளுக்கும் நடந்து சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கோயில்களுக்கும் செல்லவுள்ளேன். எனது நடைப்பயணத்தை தொடங்கும் போது நான் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வான 2010 -2011 ஆம் ஆண்டு முதல் வங்கிக் கணக்கு நிதி விவரங்களை மக்களுக்கு சமர்ப்பிப்பேன். கடந்த 13 ஆண்டுகளாக நான் செய்த செலவுகள், எனது வருமானம் குறித்து இணையதளத்தில் நடைப்பயணம் தொடங்கும் முதல் நாளில் பதிவு செய்யவுள்ளேன். 500 ரூபாய் கொடுத்து நான் தியேட்டருக்கு படம்பார்க்க சென்றிருந்தாலும் அது பதிவாகி இருக்கும். தமிழக அரசியலில் முதல்முறையாக என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக தமிழக மக்களுக்குத் திறந்து காட்ட போகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications