சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தடம் மாறுகிறதா புதுகை எக்ஸ்பிரஸ் ? ‘கெத்து’ காட்டிய விஜயபாஸ்கருக்கு ‘செக்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைய விரும்பிய நிலையில், இத்தனை நாட்கள் அதற்கான உரிய சிக்னல் கிடைக்காததால் சி.விஜயபாஸ்கர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் வேறு வழியில்லாமல் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் நகரும் வேகம் சில நேரங்களில் அதிரடியாக இருக்கும், சில நேரங்களில் அதிர்ச்சியாக இருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பிருந்தே அ.தி.மு.க.வை உடைத்து, கட்சி மாறி வந்தவர்களுக்கு 'சீட்' கொடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க).

c vijayabaskar Vijay

தேர்தல் முடிந்து, ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகும் இந்த ஆட்டம் ஓயவில்லை. கடந்த மே 13 அன்று நடந்த த.வெ.க அரசின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, அ.தி.மு.க-வின் கொறடா உத்தரவை மீறி த.வெ.க-வுக்கு ஆதரவாக ஓட்டளித்த 25 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த விராலிமலை சி. விஜயபாஸ்கரும் ஒருவர்.

கடந்த ஜூன் 16 அன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமை முடிவுகளை பகிரங்கமாக விமர்சித்துவிட்டு, தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார் இந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்.

மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வரிசையாக ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்து, ஐந்தாவது விக்கெட்டாக விழுந்தார் விஜயபாஸ்கர். ஆனால், "ராஜினாமா செய்யும் வரை ராஜாதி ராஜா... செய்த பிறகு?" என்ற கதையாக மாறிவிட்டது அவரது தற்போதைய அரசியல் நிலைமை.

தன் பின்னால் இருக்கும் பெரும் தொண்டர் படையோடு த.வெ.க தலைவரும், முதலமைச்சருமான விஜய் முன்னிலையில்தான் கட்சியில் இணைய வேண்டும் என்பதில் விஜயபாஸ்கர் உறுதியாக இருந்தார். சும்மா சாதாரண இணைப்பாக இல்லாமல், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மீண்டும் விராலிமலையில் அதே சீட், வெற்றி பெற்றதும் மீண்டும் அமைச்சர் நாற்காலி, தன்னோடு வரும் அ.தி.மு.க நிர்வாகிகளுக்குக் கட்சியில் தகுந்த பதவி என ஒரு பெரிய கோரிக்கைப் பட்டியலையே த.வெ.க தலைமைக்கு அனுப்பியிருந்தார்.

"முதலில் பதவியை ராஜினாமா செய்யுங்கள், அப்புறம் பார்க்கலாம்" என்று பச்சைக்கொடி காட்டிய த.வெ.க தலைமை, அவர் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கொடுத்த அடுத்த நிமிடமே, கோரிக்கைகளை அப்படியே கிடப்பில் போட்டது.

முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து சிக்னல் பெறுவதற்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னையிலேயே முகாமிட்டிருந்தார் விஜயபாஸ்கர். ஆனால், தலைமை தரப்பில் இருந்து "நோ ரெஸ்பான்ஸ்". விஷயம் தெரிந்த அ.தி.மு.க-வினர் மற்றும் இதர அரசியல் கட்சியினர், "என்னப்பா, மாஜி அமைச்சருக்கு இந்த கதியா?" என்று சென்னை டீக்கடைகள் வரை நக்கலடிக்கத் தொடங்கினர்.

"தலைமை என்பது அதிகாரமோ அல்லது அகம்பாவமோ அல்ல... அது அர்ப்பணிப்புடன் அனைவரையும் அரவணைப்பது" என்று அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறும்போது எக்ஸ் (X) தளத்தில் பஞ்ச் பேசிய விஜயபாஸ்கர், இப்போது த.வெ.க-வின் அமைதியால் சொந்த ஊருக்கும் போக முடியாமல், சென்னையிலும் சிக்னல் கிடைக்காமல் தவித்துப் போனார்.

ஈஞ்சம்பாக்கத்தில் ஜூன் 29-ல் என்ன நடக்கும்?

ஒரு கட்டத்தில் நொந்துபோன விஜயபாஸ்கர், "இணைப்பு விழா இல்லாமல் ஊருக்குத் திரும்புவதில்லை" என்ற சபதத்துடன், த.வெ.க பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான என். ஆனந்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் முடிவில், "சரி, இப்போதைக்கு அமைச்சர் ஆனந்த் தலைமையிலேயே இணைந்துவிடுங்கள், அதற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்திக்க நேரம் வாங்கித் தருகிறோம்" என்ற சமரசத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து வரும் ஜூன் 29 (திங்கட்கிழமை) மாலை, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள ஈஞ்சம்பாக்கம் ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் பிரம்மாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விராலிமலையில் இருந்து சுமார் 5,000 தொண்டர்களைச் சென்னைக்கு அழைத்து வர வாகன ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தடபுடலாக உணவளிக்க, ஆத்தங்குடி பெருமாள் என்ற பிரபல சமையல் கலைஞரும் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறார்.

தொகுதி முழுக்க தொண்டர்களைக் கவர குலோப்ஜாமூன், எவர்சில்வர் பாத்திரம், பேனா அடங்கிய பரிசுப் பொருட்கள், விஜயபாஸ்கர் படம் அச்சிடப்பட்ட பைகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

தேர்தலுக்கு பிறகு மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை. எல்லாமே புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறுகிறது. அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களும் விஜய்யை சந்திக்க முடியவில்லை. ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் முன்னிலையிலேயே இணைகிறார்கள். ஏற்கெனவே விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்தவர்களுக்கு பதவி கொடுப்பதில் முன்னுரிமை என விஜய் முடிவு செய்துள்ள நிலையில் மாற்றுக் கட்சியினருக்கு பதவிகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜயபாஸ்கரை பொருத்தமட்டில் தற்போதைக்கு அமைச்சர் ஆனந்த் தலைமையில் மட்டுமே இணைவு, இடைத்தேர்தல் சீட் பற்றி இப்போதைக்கு வாக்குறுதி இல்லை. அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி பதவி கேட்டிருந்த நிலையில் "விருப்பமிருந்தால் சேருங்கள்" என்ற பதிலே கிடைத்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+