சுதீஷுடன் ரகசிய பேச்சு.. கூட்டணிக்கு அடி போட்ட நயினார் நாகேந்திரன்? ஆளுநர் விருந்தை கவனிச்சீங்களா!
சென்னை: குடியரசுத் தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்கப்பட்டிருந்தது. இதில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் மற்றும் தேமுதிக தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த விருந்தில் எல்.கே.சுதீஷுடன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனியே சந்தித்து பேசியிருந்தது கவனம் பெற்றிருக்கிறது.
குடியரசுத் நாளையொட்டி இன்று ஆளுநர் மாளிகையில், தேநீர் விருந்து அளிக்கப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்த விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், தமிழக அமைச்சர்கள் யாரும் விருந்தில் பங்கேற்கவில்லை.

திமுக கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் விருந்தை புறக்கணித்தன. எனவே, விருந்தில் கூட்டணி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், மறுபுறம் பாஜக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த விருந்தில், தேமுதிகவின் பொருளாளர் எல்.கே.சுதீஷை தனியாக சந்தித்த நயினார் நாகேந்திரன் சில விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் பேசியது என்ன என்பது தெளிவாக தெரியவில்லை.
சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். அதுவரை என்டிஏ கூட்டணியில் இடம் பெறாமல் இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமானது, மோடி வருகையை ஒட்டி, கூட்டணியில் இணைந்தது. டிடிவி தினகரன் இதுகுறித்து கூறுகையில், பழசை மறந்து நாங்கள் ஒன்றிணைந்துவிட்டோம் என்று கூறியிருந்தார். அதேபோல இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க கடைசி நிமிடம் வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒரு ராஜ்யசபா சீட்+டீசண்டான எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே கூட்டணி என்று தேமுதிக கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி நயினார், சுதீஷிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அப்படி எந்த பேச்சுவார்த்தையையும் நாங்கள் நடத்தவில்லை என்றும், நண்பர் என்கிற முறையில்தான் சுதீஷிடம் பேசினோம் எனவும் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications