பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு - வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை: பாஜக நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாளை திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6 வரை திருச்செந்தூரில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதி தர தமிழக அரசு மறுத்து விட்டது. வெற்றிவேல் யாத்திரைக்கு தடை கோரிய இரு வழக்குகளையும் உயர்நீதிமன்ற முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையுள்ள முருகரின் அறுபடை வீடுகளுக்கு யாத்திரை செல்ல பாஜக சில மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டு இருந்தது.
வேல் யாத்திரைக்கான சுற்றுப் பயண விவரத்தை பாஜக துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டிருந்தார். நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த வேல் யாத்திரை நிறைவு பெறவுள்ளது.

பாஜகவில் வேல் யாத்திரை
அறுபடைவீடு உள்ள நகரங்களுக்கு மட்டுமல்ல பாஜக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த பெயரில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேல் யாத்திரைக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஹைகோர்ட்டில் வழக்கு
வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு விசாரணை
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ள வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கவும், தடைவிதிக்கவும் கோரி பத்திரிகையாளர் பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். அந்த வழக்குகள் தலைமை நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விபரம் இல்லையே
அப்போது, டிஜிபி தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி யாத்திரைக்கு அனுமதி கேட்டு அக்டோபர் 15 அன்று பாஜக பொது செயலாளர் மனு கொடுத்ததாகவும், அக்டோபர் 17ல் அளித்த பதிலில் சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிபாளர்களை அணுகும்படி அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டார். மனுக்கள் வந்தால் சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாகவும், அவ்வாறு திருவள்ளூரில் பாஜக அளித்த மனுவில் கூட்டம் நடத்துவது போல மனு கொடுக்கபட்டுள்ளதாகவும், ஆனால் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என விவரங்கள் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது
மேலும் ஊரடங்கிற்கு முன்பாக மார்ச் 20ஆம் தேதி வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு எடுத்து வருவதை கருத்தில் கொண்டு, பேராட்டம் அல்லது பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துள்ள உத்தரவு அமலில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அரசு தரப்பில் பதில்
ஊரடங்கிலிருந்து தளர்வுகள் வழங்கப்பட்டாலும் மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது என்றும், அதன்படி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் நவம்பர் 16 வரை அதிகப்படியாக 100 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா அலை வீசும்
குறிப்பாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் இரண்டு மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், அனுமதி அளிக்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பாஜகவுக்கு இன்று தெரிவிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.

பாஜக விளக்கம்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தரப்பில், யாத்திரை தடத்தில் குறிப்பிட்டு எந்த பகுதியையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கப்படவில்லை என்றும், மத்திய அரசு தனி மனித விலகலை பின்பற்றவே அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளதாகவும், யாத்திரையின்போது குறிப்பிட்ட எந்த பகுதியிலும் தங்கப் போவதில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிபந்தனைகளை மீற மாட்டோம்
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ள நிலையில் யாத்திரைக்கு மட்டும் தடை விதிப்பது சரியல்ல என்று தெரிவிக்கப்பட்டதுடன், எந்த விதிகளையும், நிபந்தனைகளையும் மீறப் போவதில்லை என்றும், வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கும் என்றும், யாரும் கூடப் போவதில்லை என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும் அரசு முடிவெடுக்கும் முன்பாக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்யவும் கோரிக்கை வைத்தனர்.

ஹைகோர்ட் உத்தரவு
பின்னர் நீதிபதிகள், வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும், நவம்பர் 15 வரை இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டினர். யாத்திரைக்கு அனுமதி கோரிய மனு மீதும், அதை தடை செய்யக் கோரிய மனுக்கள் மீதும் அரசு உத்தரவு பிறப்பித்தால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என கூறி, வெற்றிவேல் யாத்திரைக்கு தடை கோரிய இரு வழக்குகளையும் முடித்துவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications