"சான்ஸ்" தரும் திமுக.. சொல்லி அடிக்கும் பாஜக.. விழிக்கும் அதிமுக.. ஸ்டாலினுக்கு நீளும் தர்மசங்கடம்
திமுக அரசை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது
சென்னை: மீண்டும் திமுக அரசுக்கு ஒரு தர்மசங்கடமும், டென்ஷனும் ஏற்பட்டுள்ளது.. தமிழக பாஜக திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளதே காரணம்..!
அதிமுக கூட்டணியில்தாம் இருக்கிறோம் என்ற சுவடே தெரியாமல் பல சமயங்களில் தமிழக பாஜக, அக்கட்சியை டேமேஜ் செய்துவிடும்.. அதில் அதிமுகவும் நிறைய முறை சிக்கி கொண்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இருந்தே, அதிலும் 4 சீட் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழக பாஜகவின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டது.

இருமுனைகள்
6 மாதங்களுக்கு முன்பேயே திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று சொல்ல ஆரம்பித்தார் அண்ணாமலை.. "திமுகவின் விமர்சனங்கள் அனைத்தும் பாஜகவை எதிர்த்தே முன்வைக்கப்படுகின்றன... பேச்சு அரசியலில் அவங்களுக்கு நாங்கதான் எதிரி... எங்களுக்கு அவங்கதான் எதிரி. எங்க 2 பேருக்கும் நடுவில்தான் யுத்தம் நடக்கிறது. இது இரு முனைப் போட்டியாக சென்று கொண்டிருக்கிறது" என்றார். அண்ணாமலை இப்படி சொன்னதுமே அதிமுகவில் கொந்தளிப்பு வெடித்தது..

பொன்விழா
காரணம், தமிழக அரசியல் களம் என்றாலே திமுகவுக்கு போட்டி அதிமுகதான்.. 7 முறை ஆட்சியை பிடித்தவர்கள்.. 50 ஆண்டுகால பொன்விழாவை கொண்டாடும் ஒரு கட்சி இருக்கிறது என்பதை மறந்து அண்ணாமலை இப்படி பேசுகிறாரே என்று டென்ஷன் ஆனார்கள்.. ஆனாலும், பாஜக எதையுமே கண்டுகொள்ளவில்லை..

தவறுகள்
"பாஜகவுக்கு என்று யுக்தி உள்ளது... திமுகவின் தவறுகளை மக்கள் முன்னிலையில் தீவிரமாக எடுத்து வைத்து வருகிறோம்.. திமுகவுக்கு மாற்று வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.. எதிர்காலத்தில் திமுகவுக்கு உண்மையான மாற்று பாஜகதான்" என்று பேட்டிகளை தந்து அதிமுகவை மேலும் வெறுப்பேற்றினார் அண்ணாமலை.., மற்றொரு பக்கம் எது திராட மாடல் என்று விமர்சித்து திமுகவையும் வெறுப்பேற்றினார்.

பாஜக
போதாக்குறைக்கு அதிமுகவுக்கு இணையாக பாஜகவும் திமுகவை கண்டித்து போராட்டங்களை கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டது.. இந்த 3 மாதங்களில் பாஜக எடுத்த போராட்டங்கள் மக்களை யோசிக்கவும் வைத்து வருகிறது என்கிறார்கள்.. அரியலூர் மாணவி மரணம் முதல் ஒவ்வொரு விஷயத்தையும் பாஜக கிண்டி வருகிறது.. திமுகவை சரமாரியாக குற்றம் சாட்டியும் வருகிறது.. அந்த வகையில் இப்போது இன்னொரு மேட்டர் பாஜகவுக்கு சிக்கி உள்ளது.

ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.. அண்ணாமலை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது மக்கள் விரோத போக்கு. இந்த அறிவிப்பால் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. எனவே, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்தும், தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும், வரும் 8ம் தேதி காலை 11:00 மணிக்கு பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மாற்று
அதிமுக இன்றைய தினம் போராட்டம் நடத்திய நிலையில் பாஜகவும் ஆர்ப்பாட்டம் நடத்த போகிறது.. பாஜக போகிற போக்கை பார்த்தால், திமுகவுக்கு மாற்றா? அதிமுகவுக்கு மாற்றா? என்று புரியவில்லையே என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. திமுக அரசின் அதிருப்தியான அறிவிப்புகள் ஒவ்வொன்றும், பாஜகவுக்கு சாதகமாகி கொண்டிருக்கிறது.. அதுமட்டுமல்ல, பாஜக தமிழகத்தில் நாளை விஸ்வரூம் எடுத்தால், அல்லது வளர்ச்சி பெற்றால் அதற்கு அடிப்படை காரணம், அதிமுக மற்றும் திமுகவும்தான் என்பதையும் நம்மமால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..!












Click it and Unblock the Notifications