ஓடி பெயரில் ஓப்பி அடிக்கலாம்..தவெகவுக்கு தாவும் தொழிற்சங்க நிர்வாகிகள்! போக்குவரத்து கழகத்தில் கலகம்
சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது இந்த விஷயம் தான் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, திமுக மற்றும் அதிமுக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் தமிழக வெற்றிக் கழக தொழிற்சங்கத்தில் இணைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 'மாற்றுப் பணி' (OD) என்ற பெயரில் கிடைக்கும் சலுகைகளை தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கமே கட்சி தாவல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பல ஆண்டுகளாக கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்டு வருகின்றன. ஓய்வூதிய நிலுவைகள், ஊழியர் பற்றாக்குறை, வாகன பராமரிப்பு செலவுகள், டீசல் விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கழகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

இந்த சூழலில் போக்குவரத்துக் கழகங்களில் வளர்ச்சியில் தொழிற்சங்கங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்தவரை, தொமுச நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
போக்குவரத்து கழகம்
அதற்கு அடுத்தபடியாக அண்ணா தொழிற்சங்கம், பின்னர் இடதுசாரி தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுப் பணியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. ஊதிய ஒப்பந்தங்கள், பணியாளர் நலத் திட்டங்கள், பதவி உயர்வு நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அரசு நடத்தும் பேச்சுவார்த்தைகளில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களே பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதன் காரணமாக, தொழிற்சங்கங்களில் உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் அரசியல் செல்வாக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மாற்றுப் பணி
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், குறிப்பாக 'மாற்றுப் பணி' என்ற நடைமுறை அதிக சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மாற்றுப் பணி என்ற பெயரில் சில தொழிற்சங்க நிர்வாகிகள் தினசரி பணிக்கு செல்லாமல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நடைமுறையில் பலர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது சில நாட்கள் மட்டுமே பணிமனைக்கு சென்று கையெழுத்திட்டு சம்பளம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தொழிற்சங்கத்தினர்
மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு சலுகை அனுபவித்ததாகவும், இதனால் போக்குவரத்துக் கழகங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவினம் ஏற்பட்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். இதுவரை திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்ததால், அந்தந்த காலகட்டங்களில் ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தினர் அதிக செல்வாக்கு பெற்றிருந்தனர். ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்துள்ளதால், புதிய சூழல் உருவாகியுள்ளது.
தவெகவில் ஐக்கியம்
போக்குவரத்துக் கழகங்களில் தவெக தொழிற்சங்க அமைப்பு இதுவரை பெரிய அளவில் இல்லாத நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அதன் உறுப்பினர் சேர்க்கை வேகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல பணிமனைகளில் தவெக தொழிற்சங்க பெயர் பலகைகள் வைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இந்த சூழலில், அதிமுக மற்றும் திமுக தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது அரசியல் மற்றும் தொழிற்சங்க வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அண்ணா தொழிற்சங்கம்
குறிப்பாக, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் தவெக தொழிற்சங்கத்தில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் அரசியல் ஆதாயம் மட்டுமல்லாமல், முன்பு கிடைத்த சலுகைகள் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சி மாறினாலும், ஆளும் கட்சி தொழிற்சங்கத்தில் இருந்தால் பல்வேறு நிர்வாக வசதிகள் கிடைக்கும் என்ற எண்ணமே பலரை புதிய தொழிற்சங்கத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள்
ஆனால் இந்த நிலைமையை பல போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபடுவது வேறு, பணிக்கு செல்லாமல் முழு சம்பளம் பெறுவது வேறு என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆட்சி யாருடையதாக இருந்தாலும், அரசுப் பணியில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.
கட்டாயம் பணி
குறிப்பாக, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பற்றாக்குறையால் ஏற்கனவே பல வழித்தடங்களில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுகின்றன. இந்த சூழலில் நிரந்தர பணியாளர்கள் பணிக்கு வராமல் இருப்பது பொதுமக்கள் சேவையையே பாதிக்கும் என்று ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கடந்த காலங்களில் இருந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதாவது, தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தொழிற்சங்கப் பணிக்காக அனுமதி வழங்கி, மற்ற நாட்களில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்ற முறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என பலர் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications