"கொக்கு" போல காத்திருப்போம்! 2026இல் தமிழகத்தில் ஆட்சியை தூக்குவோம்! அண்ணாமலை அடுத்து சொன்ன வார்த்தை
சென்னை: பாஜக பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக கொக்கு போலக் காத்திருந்து ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். நேற்றைய தினம் திருச்சி மாவட்டத்தில், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் தொகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டார்.

நேற்றைய தினம் அவர் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் அவர் நடைபயம் மேற்கொண்டார். இதற்கிடையே இன்று பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது,
அண்ணாமலை: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "என் மண் என் மக்கள் யாத்திரை இப்போது 103 தொகுதியை நிறைவு செய்துள்ளது. அடுத்த கட்ட நடைப்பயணம் 15ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. இந்த பாத யாத்திரையில் எனக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மக்களிடையே பாத யாத்திரைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கட்சி சாராத பலரும் கூட இதில் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் இருந்து கொண்டு ஆட்சி நன்றாக இருப்பதாக திமுகவினர் சொல்கிறார்கள். பல ஊர்களுக்குச் சென்றால் கள நிலவரம் அவர்களுக்குப் புரியும். மக்களிடையே அதிருப்தி இருக்கிறது. நடைபணத்தில் பலரும் ஆட்சி சரி இல்லை என்று தங்களிடம் முறையிடுகிறார்கள். குறிப்பாக விவசாயிகளைப் பிரச்சனை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், எல்லா இடங்களிலும் குறைகளை மட்டுமே பார்க்க முடிகிறது.
பாத யாத்திரை: பாத யாத்திரையில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். திராவிட மாடல் அரசால் இங்கே சமூக அநீதி ஏற்படுகிறது. மேலும், இந்த யாத்திரை மூலம் சாமானியர்களுக்கு உண்மையாக என்ன தேவை என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. மேலும், வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம். அதை மனதில் வைத்தே யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது."என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பெரியார் சிலை குறித்துப் பேசிய அவர், "பெரியார் சிலை பொது இடங்களில் இருக்கலாம். பொது இடங்களில் இருக்கவே கூடாது என நான் சொல்லவில்லை. அதேநேரம் கோயில் முன்பு இருக்கக் கூடாது என்று மட்டுமே சொல்கிறோம். பெரியார் சிலையை எங்கு நிறுவ வேண்டுமோ அங்கு உரிய மரியாதையுடன் நிறுவுவோம். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் போது, பொது இடங்களில் தலைவர்கள் சிலை வைக்கப்பட்டு உரிய மரியாதை தரப்படும்" என்றார்.
பாஜக ஒரு கொக்கு: மேலும் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் நாங்குநேரி, வேங்கைவயல் என பல இடங்களில் மோசமான சம்பவங்கள் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக வேங்கைவயல் சம்பவம் நடந்து 300 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அதில் எந்தவொரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை. பெரம்பலூரில் கல்குவாரி ஒப்பந்தத்தில் கலந்து கண்ட பட்டியலின பாஜக பிரமுகரை ஆட்சியர் இருக்கும் போதே நிர்வாணப்படுத்தித் தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் மீது இதுவரை முறையாக வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
சில அரசியல் தலைவர்கள் கொக்கு மீன் என்றெல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள். நாங்கள் அரசியலில் கொக்கை போலப் பொறுமையாக இருப்போம். கொக்கு போலப் பொறுமையாக காத்திருந்து மீன்பிடிக்கும் திறன் பாஜகவுக்கு இருக்கிறது. அது 2026இல் உங்களுக்குத் தெரியும். மற்ற கட்சிகளுக்கு எங்கள் பலம் 2026இல் தெரியும். மக்கள் நல்லாசியுடன் 2026இல் ஆட்சியைப் பிடிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications