ஊர் கண்ணு, அதிமுக கொள்ளி கண்ணு எல்லாம் ஒழிஞ்சி போச்சு! ரஞ்சனாவுக்கு திருஷ்டி கழித்த பாஜக பெண்
சென்னை: பூந்தமல்லி நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சனா நாச்சியாருக்கு கையில் சூடம் ஏற்றி பாஜக பெண் ஒருவர் திருஷ்டி கழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை குன்றத்தூர் டூ போரூர் இடையே மாநகர பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அதில் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடியும் பேருந்தில் மேற்கூரையில் ஏறியபடியும் மாணவர்கள் பயணம் செய்தனர்.

இதை பார்த்த நடிகை ரஞ்சனா நாச்சியார், அந்த பேருந்தை வழிமறித்து மாணவர்களை எல்லாம் கடுமையாக திட்டியும் அடித்தும் வெளியே இறக்கிவிட்டார்.
இது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலானது. அதில் மாணவர்களை நாயே என அழைத்து அறிவில்லையா என கேட்டு கடுமையாக தாக்குதல் நடத்தினார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். சிலர் பாராட்டுகளையும் தெரிவித்தனர். பேருந்துக்குள் இடம் இருந்தாலும் வேண்டுமென்றே படிக்கட்டுகளில் தொங்குவது மேற்கூரையில் பயணிப்பது, போன்ற செயல்களை செய்து மாணவர்கள் ஹீரோயிஸம் செய்ய முயற்சிக்கிறார்கள்.
இதனால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அவர்கள் கீழே விழுந்தால் உயிரிழப்போ, உறுப்பு இழப்போ, கடுமையான படுகாயங்களோ ஏற்படும் அபாயம் இருக்கிறது. அது போன்ற அலட்சியத்தால் நிறைய இளைஞர்களும் மாணவர்களும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பாரம் தாங்காமல் பேருந்தும் நிலைத்தடுமாறும் சூழலும் ஏற்படுகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மாணவர்கள் படியில் பயணம் செய்ய வேண்டாம் என அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் சிலர் அதை கேட்பதில்லை, இளம் கன்று பயமறியாது இல்லையா? இந்த நிலையில் மாணவர்களை தாக்கிய வழக்கில் புகாரின் பேரில் நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகளுடன் போரூரை அடுத்த கெருகபாக்கத்தில் உள்ள வீட்டிற்கு ரஞ்சன நாச்சியார் காரில் வந்து இறங்கினார். அப்போது அவரது வீட்டின் முன்பு பாஜக பெண் தொண்டர்கள் கூடியிருந்தனர்.

அப்போது ரஞ்சனாவுக்கு அவர்கள் ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். அதில் ஆரத்தி எடுத்த பெண்கள் திமுக, அதிமுக கண்கள் ஒழிந்து போனது என கூறி ஆரத்தி எடுத்தனர். மேலும் அங்கு பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கடவுளுக்கு கற்பூரம் காட்டும்போது தனது கையில் கற்பூரத்தை ஏற்றி ரஞ்சனாவுக்கு திருஷ்டி கழித்தார்.












Click it and Unblock the Notifications