இது நடந்திருக்கக் கூடாது .. ஆனால் கடவுளின் வழியாக கருதுங்கள் தமிழச்சி தங்கபாண்டியன் அக்கா.. அண்ணாமலை
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் புக்கிங் செய்திருந்த தனக்கு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாதாரண வகுப்பாக தரவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்று தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருந்தார். ஒரு எம்.பி ஆகிய எனக்கே இந்த நிலை என்றால்.. என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜக மாநில அண்ணாமலை, அக்கா என்று கூறி கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியான தமிழச்சி தங்கப்பாண்டியன், தென் சென்னை தொகுதி எம்பியாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அதற்காக டெல்லி சென்று வந்தார். நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு வருவதற்கான நேற்று இரவு ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் டிக்கெட் தரம் இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி இதுபற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறுகையில் 'இன்று (பிப்ரவரி 13 (நேற்று)) இரவு டெல்லி இருந்து சென்னை செல்வதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி என்னுடைய பிஸினஸ் கிளாஸ் பயண வகுப்பு தரம் இறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு எம்.பி ஆகிய எனக்கே இந்த நிலை என்றால் மற்ற பயணிகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை..
பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவைத் தரங்களை இப்படி அலட்சியம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய தவறான நிர்வாகத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நான் வலியுறுத்துகிறேன்' என்று மத்திய அமைச்சரை டேக் செய்து தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "'இது நடந்திருக்கக் கூடாது என்றாலும், தரம் தாழ்த்தப்படுவதன் அர்த்தம் என்ன என்பதைத் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்குச் சொல்ல இது சரியான நேரத்தில் வருகிறது. "ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால்" என்று கூறியிருப்பது குடும்ப அரசியலின் வம்சாவளியாக வந்த ஒருவரின் மனப்பான்மையை காட்டுகிறது.
விடியல் என்ற வாக்குறுதியுடன், தமிழகம் கடந்த நான்கு ஆண்டுகளில் இருளில் மூழ்கியுள்ளது. இந்த திமுக அரசாங்கத்தின் கீழ் தமிழக மக்களின் நிலைமையை விவரிக்க "தரம் இறக்கப்பட்டது" என்ற வார்த்தை கூட ஒரு மென்மையான வார்த்தையாகத் தெரிகிறது. எனவே கடவுள் கடுமையான உண்மையைத் தெரிவிக்கும் வழியாக இதை நினைத்துப் பாருங்கள் தமிழச்சி தங்கபாண்டியன் அக்கா.' என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.













Click it and Unblock the Notifications