உயிரை கொடுத்தாவது சனாதன தர்மத்தை காப்போம்.. உலகம் உள்ளவரை சனாதனம் அழியாது.. ஹரிஹரமுத்து ஐயர் ஆவேசம்!
சென்னை: "உயிரைக் கொடுத்தாவது சனாதன தர்மத்தை காக்க தமிழ்நாடு பிராமண சமாஜம் தயாராக உள்ளது" என தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் பேசியுள்ளார்.
தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழு கூட்டம், பிராமண சமாஜ தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தலைமையில், சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிராமண சமாஜம் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர், "நம் பிராமண சமாஜம், சமூக நலன் சார்ந்த அனைத்து பொது விஷயங்களுக்காக என்றும் பாடுபடும். தமிழகத்தில் சிலர், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர். அதற்காக சனாதன எதிர்ப்பு மாநாடும் நடத்துகின்றனர். உயிரைக் கொடுத்தும் சனாதன தர்மத்தை காக்க, தமிழ்நாடு பிராமண சமாஜம் தயாராக உள்ளது.
உலகம் உள்ளவரை, சனாதன தர்மம் நிலைத்து நிற்கும். அதனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நாம் யாருக்காகவும் எதற்காகவும் பயப்பட மாட்டோம். விநாயகர் சதுர்த்தியன்று நாம் அனைவரும், நம் வீட்டில் கணபதி ஹோமம் நடத்த வேண்டும். பிராமண சமாஜத்தில், தற்போது 12,000 உறுப்பினர்கள் உள்ளனர். விரைவில் அனைத்து மாவட்டங்களிலும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்படும். வரும் 2025ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடத்தப்படும்." எனப் பேசினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (EWS Quota), கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும், இதற்கான சான்றிதழை தாமதமில்லாமல் வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் முன்னேற்றத்திற்காக நல வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமுஎகச சார்பில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரியம். சனாதனம் சமத்துவதற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. " எனப் பேசினார்.
உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சு, நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.க.வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, "இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% மக்களை ஒழிப்பதற்கு" உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உதயநிதியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர், சனாதன தர்மத்தைக் காக்க உயிரையும் கொடுப்போம் எனப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications