அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தால் அது பிரமாண விதிமீறல்.. லா பாயிண்ட் பிடித்த இன்பதுரை!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது பிரமாண விதி மீறல் எனக் கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை.
நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள மத்திய பாஜக அரசையும், இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழகமெங்கும் நடைபெறுவதாகவும், சென்னையில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அதே நாளில் அதிமுக மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், அதைப் பார்த்து பயந்து நடுங்கித்தான் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை மையமாக வைத்து திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார். நீட் விவகாரத்தில் ஆளுநர் மீது குற்றம்சாட்டி திமுக தொடர்ந்து நாடகமாடுகிறது. நீட் விவகாரம் தொடர்பாக திமுக பேசுவது எல்லாம் பொய் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டால், அது அவர் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட போது எடுத்த பிரமாண விதியை மீறும் செயல் என்ற குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது அதிமுக. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான இன்பதுரை பதிவிட்டுள்ள ட்வீட்டில், "அரசியலமைப்பு சட்டம் 164(3)ன்படி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரமாணத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தால் அது Breach Of Oath. உச்சநீதிமன்றம் நீட் தேர்வு செல்லும் என தீர்ப்பளித்துள்ள நிலையில் உண்ணாவிரதம் இருப்பது நீதிமன்ற அவமதிப்பும் ஆகும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications