செல்வப்பெருந்தகையை கட்சியை விட்டு தூக்குங்க.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.. ராகுலுக்கு பறந்த கடிதம்
சென்னை: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி சேகர், திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியில் இருந்த அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி வேறுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய அரசியல் பிரமுகர்களும், பிரபல ரௌடிகளும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட முக்கிய ரௌடிகள் பலர் போலீஸ் தேடலில் உள்ளனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.
இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில், "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்.
புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார். அவரை இந்தக் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை எனவும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்." எனக் கூறியுள்ளார்.
முன்னதாக செல்வப்பெருந்தகை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை பற்றி கூறுகையில், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் பல கோணங்களில் தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக போலீசார் ஸ்காட்லாந்துக்கு இணையான காவல் துறை என பெயர் பெற்றவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறை கோட்டை விட மாட்டார்கள். உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications