பியூஷ் கோயல் வந்திருக்காங்க! நயினார், முருகன், வானதி, தமிழிசை எல்லாம் இருக்காங்க! அண்ணாமலை எங்கே?
சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடந்து வரும் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காததால் பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக மீண்டும் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் பாஜக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
அது போல் இணை பொறுப்பாளர்களாக இணையமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை வந்த பியூஸ் கோயலை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சென்னையில் பாஜக நிர்வாகிகளின் மையக் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர், எஸ்.ஆர்.சேகர், விஜயதாரணி உள்ளிட்டோருடன் பியூஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக- பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கெனவே இருந்த ஓபிஎஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கமலாலயத்தில் பியூஷ் கோயல் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அந்த இடத்தில் அண்ணாமலை இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பலரும் அண்ணாமலை எங்கே என தேடினர். இந்த நிலையில் எஸ்ஐஆர் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் கோவா சென்றுள்ளதால் இந்த கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.
பியூஸ் கோயலை எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கவுள்ள நிலையில் எடப்பாடி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இன்றைய தினம் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் நிச்சயம் இழுபறி நீடிக்கும் என்றே தெரிகிறது.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டது முதல் அண்ணாமலைக்கான முக்கியத்துவம் குறைவதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை அருகே நடந்த பாஜக மாநில சிந்தனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து அண்ணாமலை கூறியிருந்ததாவது: எனக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் பாஜக கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications