புதுவையில் 50 நாட்களாகியும்! அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை! ரங்கசாமி மீது அமித்ஷா கோபம்
புதுச்சேரி: புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 50 நாட்களை கடந்தும் அமைச்சர்களுக்கு இன்னும் இலாகா ஒதுக்காததால் முதல்வர் ரங்கசாமி மீது பாஜக கடும் கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
புதுவையில் மொத்தம் உள்ள 30 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் என்ஆர் காங்கிரஸ்- என்டிஏ கூட்டணி 18 இடங்களிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி 6 இடங்களிலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் , தவெக கூட்டணி கட்சி 2 இடங்களிலும் வென்றது.

இதையடுத்து முதல்வராக 5-ஆவது முறையாக ரங்கசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் பொறுப்பேற்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அது போல் அமைச்சரவையும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதையடுத்து கடந்த 17ஆம் தேதி அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவக்கொழுந்து, ராஜவேலு, பாஜகவைச் சேர்ந்த ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர்களாகினர். அதாவது மொத்தம் 5 அமைச்சர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு இதுவரை இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அது மட்டுமல்லாமல் சபாநாயகர் பதவி தங்களுக்கே வேண்டும், 3 நியமன எம்எல்ஏக்களில் ஒன்றை தர வேண்டும் என பாஜகவிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளாராம். அதே நேரம் தங்களுக்கு முக்கிய இலாகாக்களை கொடுக்க வேண்டும் என்று ரங்கசாமி கேட்டுள்ளதால் இதுவரை இலாகா யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இதுகுறித்து ரங்கசாமி கூறுகையில் அமைச்சர்களுக்கு இலாகாவை ஒதுக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. எப்போது ஒதுக்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்போது ஒதுக்கப்படும் என ரங்கசாமி கூறியுள்ளார். அது பாஜகவுக்கு குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அண்மையில் நடந்த தேர்தலில் வென்ற முதல்வர்கள் கூட, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிவிட்டனர். ஆனால் கூட்டணியில் இருக்கும் ரங்கசாமி பிரதமரை சந்திக்கவில்லையாம். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போதும், அதற்கு பதிலளிக்காமல் வணக்கம், நன்றி என கூறிவிட்டு ரங்கசாமி சென்றுவிட்டார்.
இதனால் ஜூன் 21 இல் நடந்த யோகா தினம், உழவர் சந்திப்பு விழா, பிரென்ச் பள்ளி திறப்பு விழா உள்ளிட்டவைகளில் ஆளுநரும் முதல்வரும் ஒன்றாக பங்கேற்கவில்லை. ஆளுநர் பங்கேற்று சென்ற பிறகு ரங்கசாமி, தனியாக விழாக்களுக்கு வருவது பாஜக- என்.ஆர் காங்கிரஸ் இடையே இருக்கும் மோதலை காட்டுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இந்த நிலையில் இன்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. துறைகள் ஒதுக்காததால் அரசு அதிகாரிகளும் எந்தவித சந்திப்பு கூட்டத்தையும் ஆலோசனை கூட்டத்தையும் நடத்த முடியாமல் தவிர்க்கிறார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டமே நடந்து விட்ட நிலையில் புதுவை சட்டசபையில் எந்த செயல்பாடுகளும் நடத்தப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications