விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் அத்துமீறல்! விஜய்க்கு எதிராக கொந்தளித்த இடதுசாரிகள்!
சென்னை: ஊடகவியலாளர் விஜயனிடம் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறல் செய்கிறது என்று சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் கூட்டணி கட்சிகள் விஜய்க்கு எதிராக திரும்பியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் விடுத்திருக்கும் அறிவிப்பில், "தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான விஜயனை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்துள்ளதும், அவரது செல்போனை பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விசாரணைக்கு போலீசார் அழைப்பது என்பது சட்டரீதியான நடவடிக்கையே. ஆனால், விசாரணையைத் தாண்டி கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் நோக்கில் நள்ளிரவு நேரத்தில் அழைப்பதும், நீண்ட நேரம் அலைக்கழிப்பதும் சட்டத்திற்கு புறம்பான விசயமாகும். காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறிய செயலாகும். இதுபோன்று அத்துமீறிய நடவடிக்கைகளை காவல்துறை உடனடியாக நிறுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது" என தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் மு.வீரபாண்டியனும், பத்திரிகையாளர் விஜயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். அவர் விடுத்திருந்த அறிக்கையில், "தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் திருவல்லிக்கேணி காவல் துறை புதிய தலைமுறை தொலைகாட்சி முதுநிலை ஆசிரியர் விஜயனை அலைக்கழித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.
குற்றச்சாட்டு எழும் போது, அது தொடர்பாக விசாரணை மேற்கொள்வது காவல் துறையின் சட்டம் சார்ந்த கடமையாகும். ஆனால், அந்த விசாரணை சட்ட முறைகளையும், நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.
முதுநிலை செய்தி ஆசிரியர் விஜயன் நெறிப்படுத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வோர் அனைவரும் அவரோடு தொடர்பில் இருப்பதும், இவரும், அவர்களை தொடர்பு கொள்ளுவதும் தொழில் சார்ந்த பணி என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு விஜயன் மீது குற்றம் சுமத்த முயல்வது அதிகார அத்துமீறலாகும்.
இது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்ட விளக்கக் குறிப்பு அபத்தமானது. கடந்த கால ஆட்சிகளில் நடந்த அத்துமீறல்களை பட்டியலிட்டு, இன்றைய தவறை நியாயப்படுத்தும் வகையில் வலிந்து பேசுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை அச்சுறுத்தப்படுவதும், கருத்து சுதந்திரத்தை பறிப்பதும் மற்றும் மறுப்பதும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரானது.
இத்தகைய நடவடிக்கைகளை தவெக அரசு கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ஊடகவியலாளர் விஜயன் அலைக்கழிப்படுவதை கைவிட்டு, அவர் சுதந்திரமாகப் பணியாற்றும் சூழலை உறுதிப்படுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது" வலியுறுத்தியிருந்தார்.
இப்படியாக விஜயன் விஷயத்தில் கூட்டணி கட்சியினர் விஜய்க்கு எதிராக திரும்பியிருப்பது, தமிழக அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
