அரண்ட எடப்பாடி பழனிசாமி.. அதென்ன "அம்மா திமுக"? நேராவே சந்திக்கிறார் ஓபிஎஸ்.. நழுவுதா "காவு துண்டு"?
சென்னை: தொடர் சறுக்கல்களுக்கும், தொடர் பின்னடைவுகளுக்கும் ஆளான ஓபிஎஸ், புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இதுகுறித்து விரைவில் அறிவிக்க போகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடந்த வருடம், பொதுச்செயலாளர் பதவி விவகாரம் அதிமுகவில் வெடித்தபோதே, ஓபிஎஸ் இனி என்ன செய்ய போகிறார்? என்ற கேள்விகள் வட்டமடித்தன.. எழுந்தன.. குறிப்பாக, அமமுகவுடன் ஓபிஎஸ் இணக்கமாகிவிட்டபோது, இதே கேள்விகள்தான் மேலும் வலுவாகின.

3 ஆப்ஷன்கள்: ஓபிஎஸ்ஸூக்கு மொத்தம 3 சாய்ஸ்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.. ஒன்று, ஓபிஎஸ் அமமுகவில் இணையலாம் அல்லது ஓபிஎஸ் தனி அணியாகவே செயல்பட்டு, பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் அல்லது தனக்கென்று சொந்தமாகவே ஒரு கட்சியை துவங்கி தேர்தலை சந்திப்பது, என 3 ஆப்ஷன்கள் இருந்தன.. ஆனால், இதில், தனிக்கட்சி ஆரம்பிக்க ஓபிஎஸ் தயக்கம் காட்டுவதாக அப்போதே சொன்னார்கள்..
காரணம், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிராக ஓபிஎஸ் அப்பீலுக்கு சென்றிருந்த நிலையில், அதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறதென்று தெரியாது.. எனவே, தீர்ப்பின் முடிவுகள் உறுதியாகாமல், இறுதியாகாமல், ஓபிஎஸ் எந்த முடிவையும் இப்போதைக்கு எடுக்க வாய்ப்புமில்லை..
அமமுக தினகரன்: அப்படியானால், 2வது ஆப்ஷனாக, அமமுகவுக்கு ஓபிஎஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என்றார்கள்.. காரணம், சசிகலாவுக்காகவே, பொதுச்செயலாளர் பொறுப்பை, நீண்ட காலமாக ஒதுக்கி வைத்து காத்திருந்தார் தினகரன்.. அந்தபொறுப்பில் ஓபிஎஸ் உட்கார்ந்தால், ஒரே குடையின்கீழ் தென்மண்டலத்தையும், அதிமுக வாக்குகளையும் சேர்த்து ஒரேகுடையின்கீழ் கொண்டு வர முடியும் என்று கணக்கு போடப்பட்டது. ஆனால், அமமுகவில் உறுப்பினராககூட ஓபிஎஸ் இணையவில்லை.
அப்படியானால், பாஜக பக்கம் செல்வாரோ? ஏற்கனவே காவி துண்டை கழுத்தில் போட்டு, கலக்கியவர்தானே ஓபிஎஸ்? அதனால், பாஜகவில் நிரந்தரமாகவே ஐக்கியமாகிவிடுவாரா? என்ற சந்தேகம் கிளம்பியது.. ஆனால், எந்த கட்சியிலும் ஓபிஎஸ் சேரவில்லை.
பொதுக்குழு தீர்ப்பு: இப்போது, பொதுக்குழு தீர்ப்பு வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் & டீம் பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப்போவதுமில்லை. இந்நிலையில், தனிக்கட்சி என்ற ஆப்ஷனை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர், என மூத்த தலைவர்கள் ஓபிஎஸ் பக்கம் இருந்தாலும்கூட, தன் பலத்தை நிரூபிக்க, இன்னும் அதிக ஆதரவுகள் ஓபிஎஸ்ஸுக்கு தேவையாக இருக்கிறது. செப்டம்பர் 3ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களுக்கும் புரட்சி பயணம் போவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆதரவாளர்களை மட்டுமின்றி, அதிமுக நிர்வாகிகளையும் ஓபிஎஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளாராம்..

நீதிமன்ற உத்தரவுகள்: ஆனால், தற்போதைய நீதிமன்ற உத்தரவு காரணமாக, அதிமுக என்ற பெயரில் ஓபிஎஸ் இனிமேல், பயணிக்க முடியாது என்பதால், புதிய கட்சி துவக்குவது குறித்து, ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினாராம்.. அப்போது, "அம்மா திராவிட முன்னேற்ற கழகம்" என்பது உட்பட 3 பெயர்கள், புதிய கட்சிக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது..
கட்சியின் கொடி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.. அதிமுக கொடி நிறத்தில், சிறிய உருவிலான அண்ணா படம், கொடி நடுவில் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் செங்கோல் வழங்கும் படம் இடம்பெறும் வகையில், கொடியை வடிவமைக்க ஆலோசிக்கப்பட்டதாம். எனினும், புதிய கட்சியின் பெயர், கொடி போன்றவை இறுதி செய்தபிறகு, ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications