சென்னையில் திக் திக்.. நடு ரோட்டில்.. அத்தனை பேர் பார்க்கும்போது.. வாலிபரை வெட்டிய பள்ளி மாணவன்
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (20). டெலிவரி பாயாக பணியாற்றி வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவனை கேலி கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும், கார்த்திக் இரு வாரங்களுக்கு முன் பள்ளி மாணவனான 17 வயது சிறுவனை அடித்து மிரட்டி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9.30 மணியளவில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை பகுதியில் கார்த்திக், இருசக்கர வாகனத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார்.

17 வயது சிறுவன்
அப்போது அவருக்கு பின்னால் நடந்து வந்த 17 வயது பள்ளி மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் பலமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் கார்த்திக் சுருண்டு விழுந்தார். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ராயப்பேட்டை போலீசார் கார்த்திக்கை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சை
அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற கார்த்திக் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட ராயப்பேட்டை போலீசார் கார்த்திக்கை வெட்டிவிட்டு தப்பியோடிய 17 வயது பள்ளி மாணவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிறுவன்
விசாரணையில் தன்னை கார்த்திக் தொடர்ந்து கேலி கிண்டல் செய்தும், அடித்தும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், அதை தான் வீட்டில் கூறியபோதும் பெற்றோர் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் போலீஸாரிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

ஆத்திரத்தில் வெட்டியதாக வாக்குமூலம்
அதனால் கார்த்திக் மீது இருந்த ஆத்திரத்தில் தானே பல்லாவரம் சந்தைக்குச் சென்று கத்தியொன்றை வாங்கிக் கொண்டு வந்து கார்த்திக்கை வெட்டியதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கெல்லிஸ் காப்பகத்தில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைவெறி தாக்குதல்
இந்த நிலையில் இந்த கொலைவெறி தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதை பதைக்க வைக்கின்றன. அந்த வீடியோவில் இடம் பெற்ற காட்சிகள் இவைதான்: இரவு 9.30 மணியானாலும் அந்த சாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. எல்லாரும் சகஜமாக வருவது போவது என இருக்கிறார்கள்.

மக்கள் நடமாட்டம்
மக்கள் நடமாட்டமும் அதிகளவில்தான் காணப்படுகிறது. அரிவாள் வெட்டு தொடர்பான சிசிடிவி காட்சி என்பதால் இதை பார்க்கும் போது எங்கே வெட்டுகிறார்கள், யார் வெட்டுகிறார்கள், எங்கிருந்து குற்றம்சாட்டப்பட்டவர் வருகிறார் என்பதை கண் சிமிட்டாமல் பார்க்கத் தோன்றுகிறது. அவ்வாறு வச்ச கண் வாங்காமல் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த போது நடந்து செல்வோரை பார்த்து இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என நம் மனதிற்குள்ளேயே ஒரு கணிப்பு எழுகிறது.

வட்டமிட்டு காட்டுதல்
அப்போது பார்த்து ஒரு இடத்தில் வட்டமிட்டு காட்டப்படுகிறது. அந்த இடத்தை உற்று நோக்கினால் கருப்பு நிறத்தில் ஒரு அட்டை அணிந்து கொண்டு சிறுவன் வருகிறார். கார்த்திக் இருக்கும் இடத்திற்கு வரும் போது அந்த சிறுவன் அவசர அவசரமாக தனது இடுப்பில் வைத்திருக்கும் அரிவாளை எடுத்து ஓங்கி வெட்டுகிறார். ரத்த வெள்ளத்தில் கார்த்திக் சரிந்தவுடன் அச்சமடைந்த அந்த சிறுவன் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடுகிறார்.

ஸ்தம்பித்த சாலை
இந்த காட்சிகளால் அந்த சாலையே ஸ்தம்பித்து நிற்கிறது. ஒரு பக்கம் கார்த்திக்கின் நிலை குறித்து சிலர் போலீஸுக்கு போன் செய்கிறார்கள். மறுபுறம் சிறுவன் வெட்டிய வெட்டு தப்பி தவறி கார்த்திக்கின் கழுத்தில் விழுந்திருந்தால் இன்னேரம் உயிரே போயிருக்குமே! அப்படி என்னதான் அந்த சிறுவனுக்கு இந்த வயதில் இத்தனை கொலை வெறி என அங்கிருப்போர் பேசிக் கொள்ளும் அளவுக்கு இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications