ரிசார்ட் அரசியலா? கூட்டணி அரசா? விஜய்யின் முதல் அரசியல் அக்னிப் பரீட்சை! தவெகவின் அடுத்த மூவ்!
சென்னை: தமிழ்நாடு தேர்தலில் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசைக்கட்டி நிற்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைப்பது முதல் பெரும்பான்மையை நிரூபிப்பது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்று அவருக்கு பல்வேறு சிக்கல்கள் வரிசை நிற்கிறது.
தமிழக அரசியல் களம் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு புதிய க்ரைம் நாவலைப் போல விறுவிறுப்பாக மாறியிருக்கிறது. 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், கோட்டையில் அமர இன்னும் 10 இடங்கள் என்ற மேஜிக் தூரத்தில் நிற்கிறது.

விஜய்
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜய், இப்போது தனிப்பெரும் கட்சித் தலைவராக மாறியுள்ள நிலையில், அடுத்த சில நாட்கள் நாட்கள் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் மிக முக்கியமான நாட்களாக அமையவுள்ளன. எதிர்வரும் காலத்தில் விஜய் சந்திக்கும் சவால்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
முதல் சிக்கல்
234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற இலக்கை அடைய விஜய் சில அரசியல் நகர்வுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது விஜய் 10 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ள நிலையில், அவர் மற்ற கட்சிகளை அழைத்து கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 5 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ், தேசியத் தலைமையின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது. ராகுல் காந்தி ஏற்கெனவே ஆர்வம் காட்டியுள்ள நிலையில், இது விஜய் பிரச்சினையை ஓரளவுக்குத் தீர்க்கும்.
4 இடங்களைக் கொண்டுள்ள பாமக மற்றும் மற்ற சிறிய இணைப்பதில் சில கொள்கைச் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், தாண்டி விஜய் சிறிய கட்சிகளைக் கொண்டு வந்தால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் வராது. 47 இடங்களைப் பெற்றுள்ள அதிமுக வெளியே இருந்து ஆதரவு தரலாம்.. இருப்பினும், இதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள். இதைச் சமாளித்தாலும் கூட விஜய்க்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வரிசை கட்டி நிற்கிறது.
அடுத்த சிக்கல்
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில், விஜய்யைத் தமிழ்நாடு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்கலாம். ஆனால், பதவியேற்ற பிறகு 15 நாட்களுக்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க வேண்டும். இந்தப் பதினைந்து நாட்கள்தான் விஜய்யின் அரசியல் ஆளுமைக்கான உண்மையான 'அக்னிப் பரீட்சை'.
ஆட்சியைக் கைப்பற்றுவது எவ்வளவு கடினமோ, அதைத் தக்கவைப்பது அதைவிடச் சவால் நிறைந்தது.. பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை தவெக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டுகளில் தங்கவைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது பெரும்பான்மையை நிரூபித்தாலும் கூட மைனாரிட்டி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பது எப்போதும் தலைவலியாகவே இருக்கும். இதனால் அடிக்கடி ரிசார்ட் அரசியல் கூட நடக்கலாம்!
வாய்ப்பு இருக்கு
மேலும், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. அது வரும் காலத்தில் விஜய்க்கு எதிராகத் திரும்பவும் கூட வாய்ப்புகள் உள்ளது. 50 ஆண்டு திராவிடக் கட்சிகளுடன் பழகிப்போன அதிகாரிகளை, ஒரு புதிய கட்சியின் சிந்தனைக்கு ஏற்பச் செயல்பட வைப்பது விஜய்க்குப் பெரும் சவாலாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்..
பெரிய கேள்வி
தமிழ்நாடு நிதிநிலை ஏற்கனவே சிக்கலாக உள்ள சூழலில், தேர்தல் நேரத்தில் அறிவித்த 8 கிராம் தங்கம் மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயமும் விஜய்க்கு இருக்கிறது. ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் தமிழக அரசின் நிதிநிலையைச் சீர்செய்து, இந்த 'இலவசங்களை' எப்படி வழங்கப் போகிறார் என்பதே இருக்கும் பெரிய கேள்வி!














Click it and Unblock the Notifications