சந்திரயான் 3 லேண்டரையும், ரோவரையும் ஏன் எழுப்ப முடியவில்லை? விஞ்ஞானி வீரமுத்துவேல் விளக்கம்
சென்னை: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரும், ரோவரும் தற்போது நிரந்தர உறக்க நிலைக்கு சென்றுவிட்டது. இதை மீண்டும் எழுப்ப முடியாததற்கான காரணத்தை இந்த திட்ட இயக்குநர் விஞ்ஞானி வீரமுத்துவேல் விளக்கியிருக்கிறார்.
விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு விஞ்ஞானிகளுக்கு அரசு தரப்பில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

"நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. எதற்காகாக விண்கலம் அனுப்பப்பட்டதோ அந்த மிஷனை விண்கலன் சிறப்பாக செய்து முடித்திருக்கிறது. அதேபோல விண்கலனில் உள்ள கருவிகளும் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. இது ஒரு நிலவு நாள் மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நம்மிடம் அணு பேட்டரி இல்லாத காரணத்தால் இரண்டாவது நிலவு நாளில் லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியவில்லை" என்று கூறியுள்ளார்.
நீண்ட எதிர்பார்ப்பு இருந்தும் மீண்டும் இவற்றை உயிர்த்தெழுப்ப முடியாமல் போனது சிறிய ஏமாற்றமாக இருந்தாலும், இஸ்ரோவின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறது என்கிற திருப்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதேபோல, 'அணு பேட்டரி' என்றால் என்ன? ஏன் சந்திரயான் 3 விண்கலத்தில் அதை பொருத்தி அனுப்பவில்லை என்கிற கேள்விகளுக்கும் மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "விண்வெளி பயணங்களுக்கு 'ஐசோடோப்பு தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்' (radioisotope thermoelectric generator -RTG) எனப்படும் அணு பேட்டரி அவசியமாக இருக்கிறது. பூமியை தாழ் நிலையில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான மின்சாரம் சூரியனிலிருந்து கிடைக்கிறது. இதே புளூட்டோவை தாண்டி நாம் ஆய்வு செய்யும் ஆழ்விண்வெளி ஆய்வுகளுக்கு மின்சாரம் தேவையெனில் அதை சூரியனிலிருந்து பெற முடியாது. ஏனெனில் அங்கு சூரிய வெப்பம் மிக மிக குறைவாக இருக்கும்.
எனவே மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்த அணு பேட்டரி பயன்படுகிறது. சீபெக் விளைவு மூலம் இந்த பேட்டரியில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. அதாவது ஒரு கம்பியை எடுத்து அதை வட்டமாக வளையல் போல வளைத்துக்கொண்டு அதன் ஒரு பாதியை ஐஸ் கட்டியிலும், மறு பாதியை நெருப்புக்கு அருகிலும் ஒரே நேரம் வைக்கும்போது அந்த வளைவான கம்பியில் மின்னோட்டம் உருவாகும். இதில் எந்த அளவுக்கு வெப்பம் ஏறுகிறதோ அந்த அளவுக்கு மின்னோட்டம் அதிகரித்து மின்சாரம் உற்பத்தியாகும்.
இந்த முறையை வைத்துதான் பேட்டரியை செய்ய இந்தியா முயன்று வருகிறது. நிலவின் தென்துருவத்தில் குளிர் அதிகமாக இருப்பதால் இயற்கை கதிரியக்க தனிமத்தைகொண்டு வெப்பத்தை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு பெரும்பாலும் புளூட்டோனியம், ஸ்ட்ரோண்டியம் மற்றும் கியூரியம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இதை கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஐசோடோப்பு தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர் 30-50 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
நாமும் ஐசோடோப்பு தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டரை தயாரிக்கும் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துவிட்டோம். மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் இது உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இது முழுமை பெற்று பயன்பாட்டுக்கும் வந்துவிடும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications