சென்னை மெரினாவில் தொடங்கியது விமான சாகச நிகழ்வு! வெயிலுக்கு நடுவே குடைகளுடன் திரண்டு மக்கள் உற்சாகம்
சென்னை: விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாராசூட் சாகசத்துடன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்று, விமான சாகச நிகழ்வை நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.
இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச காட்சி நடைபெற்று வருகிறது. மெரினா கடற்கரையில் இதுபோன்ற விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம்.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட உள்ளனர். இதையொட்டி பொதுப்பணித்துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெற உள்ள விமான சாகச காட்சியை நேரில் காண்பது எப்படி என்ற விவரத்தைப் பார்க்கலாம். விமானப்படையின் இந்த பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை, எந்தவித கட்டணமும் இன்றி பொதுமக்கள் இலவசமாகவே கண்டுகளிக்கலாம். இந்திய விமானப்படையின் சென்னை ஏர் ஷோ 2024 -வை காண டிக்கெட் எதுவும் தேவை இல்லை. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை.
விமான சாகசத்தை நேரில் காண விரும்பினால், சீக்கிரமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றுவிடுங்கள். பொதுமக்களின் நுழைவில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சீக்கிரமாக செல்பவர்களுக்கு, அனைத்து நிகழ்வுகளையும் பார்க்க சிறப்பான இடம் கிடைக்கும்.

மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. ஏர் ஷோவில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து ஸ்டண்ட் ஷோக்களையும், இந்திய விமானப்படையின் எலைட் அணிகள் நிகழ்த்த உள்ளன. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய்-30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக்-29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் ஆகியவை நிகழ்த்த இருக்கின்றன.
இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்டவையும் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன.
சாகச பயிற்சிக்கான ஒத்திகையை விமானப்படை ஏற்கனவே தொடங்கி நாள்தோறும் வானில் நடத்தி வந்தது. சென்னை வான்பரப்பில் நண்பகல் நேரங்களில் விமானங்கள் சீறிப்பாய்ந்து பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்நிகழ்வை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்புகிறது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிட்டு இந்நிகழ்வை சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப்படை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6,500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன.
விமான சாகச நிகழ்ச்சியை காண வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் ஏரியாக்களும் சென்னை போக்குவரத்து காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் பிரசிடன்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி (நீல வண்ண பாஸ் மட்டும்) வாகனங்களை நிறுத்தலாம். சாந்தோம் சாலையில் காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப் பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதீட்ரல் ஆரம்ப பள்ளி, சமுதாய கூடம், சாந்தோம், லூப் ரோடு (ஒரு பக்க பார்க்கிங்) ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.

ஆர்.கே.சாலையில் எம்ஆர்டிஎஸ்- லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளியில் வாகனங்களை நிறுத்தலாம். வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கம், ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம், அண்ணாசாலையில் தீவுதிடல் மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (செயலகம் எதிரில்), மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, எம்.ஆர்.டி.எஸ் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தலாம்.
இந்த வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தர வேண்டும். ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்தலாம்.
பேருந்துகளில் செல்லலாம்: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை 8 மணி முதல் அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எம்டிசி சிற்றுந்துகள் மூலம் அரசினர் தோட்டம் மற்றும் டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications