கொண்டாட்ட ஞாயிறு கொடுங்கனவாக மாறிய அவலம்.. மிரண்ட சென்னை.. கணிக்கத் தவறியதா அரசு? என்ன நடந்தது?
சென்னை: நேற்று லட்சக்கணக்கானோருக்கு கொண்டாட்டமாக தொடங்கிய ஞாயிற்றுக்கிழமை, கொடுங்கனவாக மாறியது. மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வுக்கு வந்தவர்கள் கடுமையான நெரிசலில் சிக்கித் தவித்தனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 5 பேர் பலியாகினர். காலை 9 மணிக்கே கூட்டம் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியபோதும், நிலைமையை கணிக்கத் தவறியதே இந்த உயிர் பலிகளுக்கு காரணம் என விமர்சிக்கப்படுகிறது.
இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில், விமானப்படையில் உள்ள பல்வேறு வகையான 72 விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டன.

சென்னை மெரினா கடற்கரை: இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். கடுமையான வெயில், கூட்ட நெரிசலால் சுமார் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீர்ச்சத்து இழப்பு: சென்னை மெரினா கடற்கரையில் இருந்த தற்காலிக முகாமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது?: விமான சாகச நிகழ்வை காண வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நெரிசலால் பாதிக்கப்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்திருந்தனர். குறிப்பாக மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வேறு சாலைகளை பயன்படுத்த போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால்: ஞாயிற்றுக்கிழமை என்பதால் விமான வான் சாகச நிகழ்ச்சியை நேரில் பார்க்க சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மின்சார ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள் மூலமாக நேற்று காலை 7 மணி முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக சென்னை மெரினா கடற்கரை நோக்கி வரத் தொடங்கினர். நேரமாக நேரமாக மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது.
காலை 8 மணிக்கு பிறகு, பெரும்பாலான ரயில் நிலையங்களிலும் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. விமான சாகச நிகழ்ச்சியை காண அதிக அளவில் மக்கள் வந்த நிலையில் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி மிகவும் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டது.

ரயில்கள் போதிய அளவுக்கு இயங்கவில்லை: அரை மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், பயணிகளின் எண்ணிக்கைக்கு போதவில்லை. ரயில்களில் ஏற முடியாமல் தவித்தனர். கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன ஏராளமானோர் சாகச நிகழ்ச்சியை பார்க்கும் எண்ணத்தை கைவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
எனினும் ரயில்களில் பலர் ஆபத்தான முறையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தனர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்ற காட்சி அனைவரையும் பதற வைத்தது.
ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் இப்படி இருக்க, ஏராளமானோர் கார்கள், பைக்குகளில் குவிந்ததால் சேப்பாக்கம் வாலாஜா சாலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாட்டி வதைத்த வெயில்: விமான சாகச நிகழ்ச்சி 11 மணிக்குத் தொடங்கியபோதே, வெயில் வாட்ட ஆரம்பித்தது. பலர் குடைகளை கொண்டு வந்திருந்ததால், வெயில் கொடுமையில் இருந்து சற்றே தப்பினர். ஆனாலும், குடிநீர் போதிய அளவு இல்லாததால் மிகுந்த அவதியைச் சந்தித்தனர். மெரினா கடற்கரை பகுதியில் குடிநீர் கிடைப்பதற்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை.
கடும் கூட்ட நெரிசல், வெயில் காரணமாக ஏராளமானோருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு சோர்வடைந்தனர். 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 1 மணிக்கு முடிந்தது. அதன்பின், ஒரே நேரத்தில் பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பியதால் மெரினா காமராஜர் சாலை, சாந்தோம், பட்டினப்பாக்கம், அடையார் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரயில் நிலையங்களில்: அதேபோல, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி புறநகர் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கடுமையாக இருந்தது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முடியாமல் போன நூற்றுக்கணக்கானோர் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி தண்டவாளத்திலேயே நடந்து சென்றனர். பலர் சென்னை கோட்டை ரயில் நிலையம் வரை நடந்தே சென்றனர்.

கடும் வெயிலுக்கு மத்தியில் உணவு, தண்ணீருக்கு வழியின்றி நடந்து சென்றதால் பலர் உடல் உபாதைகளை சந்தித்தனர். விமான சாகச நிகழ்வை காண சென்னை மெரினா கடற்கரைக்கு மட்டுமே 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்ததாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ்கள் வரக்கூட வழி இல்லை: பலர் மயங்கிய நிலையில், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்களும் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்க லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என தெற்கு ரயில்வே போதிய ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கணிக்கத் தவறிய அரசு துறைகள்: காவல்துறை, போக்குவரத்து, ரயில்வே துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படாததே இந்த நிலைக்கு காரணம் என மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காலை 9 மணிக்கே கூட்டம் அதிகமானது, ரயில் நிலையங்களில் மக்கள் திரண்டு இருந்தது ஆகியவற்றை கவனத்தில் கொண்டாவது, உடனடியாக நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், பிற்பகலிலும் மக்கள் ரயில்கள் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.
உலக சாதனை நிகழ்த்துவோம் எனக் குறிப்பிட்டே விமானப்படை அழைப்பு விடுத்திருந்தது. அப்படியென்றால் லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதை யூகித்து உரிய வசதிகளை செய்திருக்க வேண்டும், மக்கள் கூட்டத்தை அரசு கணிக்கத் தவறியதே உயிரிழப்புகளுக்கு காரணம் என விமர்சிக்கப்படுகிறது. கொண்டாட்டம் மிக்க ஞாயிற்றுக்கிழமை, இந்த நிகழ்வால் பலருக்கு கொடுங்கனவாக மாறிவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications