ஈஸ்டர் வந்தாச்சு! சொந்த ஊர் செல்ல ரெடியா? சென்னை எழும்பூர்- நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்
சென்னை: சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது போல் புனித வெள்ளி வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.

இதையொட்டி கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து கணிசமான அளவில் இயக்கப்படும். அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து, வரும் 30, 31 ஆம் தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண் 06057) அதே நாள் மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து அதே தேதிகளில் மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு சென்னை- எழும்பூர் வரும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (06058) அதே நாளில் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில்கள் எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா? சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மார்க்கங்களில் நின்று செல்லும். இது போல் தாம்பரம் டூ நாகர்கோவில்- தாம்பரம் சூப்பர் பாஸ்ட் ரயில்களும் ஈஸ்டரை முன்னிட்டு இயக்கப்படுகின்றன.

வண்டி எண் 06041 தாம்பரம் டூ நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து வரும் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும். இது நாகர்கோவிலை அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு சென்றடையும். அது போல் நாகர்கோவில் - தாம்பரம் சூப்பர் பாஸ்ட் (வண்டி எண் 06042) நாகர்கோவிலிலிருந்து வரும் 30ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புறப்படும். இது அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரயிலில் 16 ஸ்லீப்பர் பெட்டிகளும் 4 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 பெட்டிகளும் உள்ளன. இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

அது போல் தாம்பரம்- கொச்சுவேலி- தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06043 என்ற எண் கொண்ட சூப்பர் பாஸ்ட் ரயில் தாம்பரத்திலிருந்து வரும் 31 ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு கொச்சுவேலியை அடுத்த காலை 11.30 மணிக்கு சென்றடையும். 06044 என்ற வண்டி எண் கொச்சுவேலியிலிருந்து ஏப்ரல் 1ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை அடுத்த நாள் காலை 10.55 க்கு வந்தடையும்.
அது போல் தாம்பரம்- நாகர்கோவில்- தாம்பரம் சூப்பர் பாஸ்ட் ரயில்களும் இயக்கப்படுகின்றன. 06053 என்ற எண் கொண்ட ரயில் வரும் 28ஆம் தேதியும் 30 ஆம் தேதியும் இயக்கப்படும். நாகர்கோவிலிருந்து தாம்பரத்திற்கு 29, 31 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இதில் மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications