சென்னையே மாறுது! கிண்டியில் 118 ஏக்கரில் பசுமை பூங்கா.. ரேஸ் கிளப் இடத்தை “பச்சை பசேல்” ஆக்க முடிவு!
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மிகச்சிறந்த பசுமைவெளி பூங்கா மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் ரேஸ் கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அண்மையில் ரேஸ் கிளப்புக்கான குத்தகையை ரத்து செய்து, நிலத்தை சுவாதீனம் எடுத்தது தமிழக அரசு. வருவாய்த்துறை அதிகாரிகள், ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தனர். , 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு மீட்டுள்ள நிலத்தில் ரூ.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தை தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னையில் மிகப்பெரிய அளவிலான பசுமைப் பூங்காவை உருவாக்க உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்துக்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால், தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து, நிலத்தை திரும்பப் பெற்று, மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டுக்கு உருவாக்கம் செய்யப்படவுள்ளது.
எனவே, கிண்டியில் நிலக் குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் செய்யப்பட்ட நிலத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூ.4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 86.9 லட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 சதவீதமாகத் தான் உள்ளது.
இது பிற இந்திய மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். ஆகவே, சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், மக்கள் தொகை பெருகி வருவதை கருத்தில் கொண்டு, பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகியுள்ளது. ஆகவே, இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டியுள்ளது.
பூங்காக்கள் மக்களின் உடல், மன நல ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன. மனஅழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து மனதுக்கு அமைதியை பூங்காக்கள் தருகின்றன. சிறார்கள் ஓடியாடி விளையாடுவதற்குப் போதுமான இட வசதியை அளிக்கும். நகரத்தின் வெப்பமான சூழலைத் தணிக்கும் மற்றும் வெள்ளப் பாதிப்பினை குறைக்கும். மாநகரத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்திடும் வகையில் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றினை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் நிறுவுதல் மிக அவசியமானது. இங்கு அமைக்கப்பட உள்ள பூங்காவானது, மக்களது மன மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், ஓய்வுக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மெருகேற்றுவதற்கும் வழிவகுக்கும்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், சென்னையில் சுற்றுச்சூழலை பேணும் வகையில், தனியார் அமைப்புகளிடம் இருந்த அரசு நிலங்களை மீட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தற்போது சென்னை, கிண்டியில் மிகப் பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த பூங்கா, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications