மொத்தமாக 8.25 கோடி செலவு சார்.. சிக்கலில் சென்னை மாநகராட்சி.. தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயத்திற்காக பிரத்யேமாக சாலைகள் மாற்றப்பட்ட வகையில் கூடுதலாக செலவு செய்த ரூ. 8.25 கோடி தமிழக அரசு தர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியிருக்கும் 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்டது. இந்த பார்முலா 4 கார் பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பந்தயம், சென்னை தீவுத்திடலில் இருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணாசாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடல் வந்து சேரும் வகையில் கார் ரேஸ் நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பந்தயம் நடத்துவற்காக தமிழக அரவு 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தது.
இதனிடையே கார் பந்தயத்திற்காக சர்வதேச தரத்தில் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்று வந்தன. கொடிப் பணியாளர் சாலை, அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலை போன்றவற்றில் சாலை அமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி ஒப்பந்ததார்களை வைத்து செய்தது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. 36 மணி நேரம் கொட்டிய மழையால் சென்னை மொத்தமே தீவுகள் போல் ஆனது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தால், கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதி மற்றும் 16-ந்தேதி நடைபெறுவதாக இருந்த பார்முலா ஒன் கார் பந்தயம் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த பந்தயத்திற்கு எதிரான வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தமிழக அரசு, மழை, வெள்ளம் காரணமாக கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் மாதத்துக்குப் பிறகு கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும்போது ஒலி கட்டுப்பாடு கடைபிடிக்கப்படும். மருத்துவமனையும் இதற்கு அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தது.ஆனால் இதுவரை பார்முலா கார் பந்தயம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மழை காரணமாக ரத்தான பார்முலா 4 கார் பந்தய போட்டிக்காக தீவு திடலை சுற்றி சாலைகள் மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டிருந்தது. இதற்கான செலவினங்களுக்காக தமிழ்நாடு அரசிடம் இருந்து சென்னை மாநகராட்சி கூடுதலாக ரூ. 8.25 கோடி கோரியிருக்கிறது. அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே சென்னை மாநகராட்சியால் சாலை ஒப்பந்ததாரர்களுக்கான பாக்கி தொகை செட்டில் செய்ய முடியும் என்று கூறியுள்ளது.
சென்னை தீவுத்திடலை சுற்றி கொடிப் பணியாளர் சாலை, அண்ணாசாலை, சுவாமி சிவானந்தா சாலை, காமராஜர் சாலை ஆகியவற்றை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ.6.42 கோடி ஒதுக்கப்பட்டது. அங்கு VG 30க்கு பதிலாக PMB 70 தரத்தில் பந்தயத்திற்கு ஏற்ற வகையில் சாலையை சென்னை மாநகராட்சி அமைத்தது. அதாவது வழக்கத்தை விட அதிகமாக செலவழித்தது. இந்த அதிகப்படியான தொகையை சென்னை மாநகராட்சி சாலை ஒப்பந்ததாரர்கள் செலவிட்டுள்ளனர். அவர்களுக்கு பில்களை செட்டில் செய்ய வேண்டும் என்பதற்காக தற்போது சென்னை மாநகராட்சி தமிழக அரசிடம் ரூ. 8.25 கோடி கூடுதலாக கோரியிருக்கிறது.












Click it and Unblock the Notifications