டிஎஸ்பி டூ போலீஸ் எஸ்ஐ வரை! மொத்தம் 55 பேரை ஏமாற்றிய கல்யாண ராணி! தாராபுரம் சத்யாவுக்கு ஜாமீன் ஏன்?
சென்னை: தாராபுரத்தில் பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக கைது செய்யப்பட்ட கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இத்தனை பேரை ஏமாற்றிய சத்யாவுக்கு ஜாமீன் கிடைக்க காரணமாக இருந்த அந்த பாயிண்ட் என்ன?
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். இவர் தன்னை சத்யா என்ற பெண் திருமணம் செய்து மோசடி செய்துவிட்டதாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர்.

முதல் தகவல் அறிக்கையின்படி, மகேஷ் அரவிந்த் திருமணத்திற்காக பெண் தேடி வந்தாராம். இவருக்கு ஆன்லைன் செயலி மூலம் சத்யா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் தான் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா என அறிமுகமாகி உள்ளார்.
பின்னர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போனதால் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது சத்யாவுக்கு மாப்பிள்ளை வீட்டார் 12 பவுன் நகைகளை அணிவித்தனராம். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கணவர் மகேஷ், சத்யாவின் செல்போனை ஆராய்ந்துள்ளார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சத்யா பல ஆண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்தன. இதுகுறித்து சத்யாவிடம், மகேஷ் கேட்ட போது மிரட்டும் தொனியில் பேசிய சத்யா, வீட்டை விட்டு தலைமறைவாகிவிட்டார். தன்னிடம் இருந்து 50 ஆயிரம் பணத்தையும் 12 சவரன் நகைகளையும் சத்யா ஏமாற்றிவிட்டதை உணர்ந்தார் மகேஷ்.
இதையடுத்துதான் தாராபுரம் அனைத்து காவல் நிலையத்தில் மகேஷ் புகார் செய்தார். சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் காவல் துறை உதவி ஆய்வாளர் வரை சிக்கி தங்களது பணத்தையும் நகைகளையும் பறி கொடுத்தனர்.
இந்த நிலையில் புதுவையில் பதுக்கியிருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருப்பூர் சிறையில் உள்ள சத்யா, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் காவல் துறை உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதை காரணம் காட்டி சத்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த பெண் சத்யா இதுவரை 50 பேரை ஏமாற்றியதாக தெரிகிறது. அதில் ஒரு விஐபியும் அடக்கமாம்.












Click it and Unblock the Notifications