நடிகை கஸ்தூரியின் வழக்கை சொல்லி! பொன்முடியின் சைவம்-வைணவ பேச்சை கண்டித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: பொன்முடியின் சொத்துக் குவிப்பு வழக்கு இன்று விசாரணக்கு வந்த போது அவர் சைவம், வைணவம் குறித்த பேசிய பேச்சை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திரையிட செய்து கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாதர் குறித்தும் சைவம், வைணவம் என்ற இந்து பிரிவுகள் குறித்தும் மிகவும் மோசமான வார்த்தைகளால் பேசியிருந்த வீடியோ வைரலானது.

இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பொன்முடியின் துணை பொதுச் செயலாளர் எனப்படும் கட்சி பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்தார். இந்த நிலையில் அவருடைய அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதிமுக மகளிரணி
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக மகளிரணியினர் பொன்முடியின் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில் இந்நிலையில் அவருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
பொன்முடியின் பேச்சு
அப்போது பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார்.
சைவம் வைணவம்
அவரது பேச்சு பெண்களை சைவ வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என சுட்டிக்காட்டினார்.
மாலை வழக்கு
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என தமிழக டிஜிபி மாலை 4.45 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
50 வழக்குகள்
அமைச்சர் பொன்முடியின் பேச்சு வீடியோ இன்னும் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன என குறிப்பிட்ட நீதிபதி, இதே பேச்சை வேறு ஏதேனும் எவரேனும் பேசி இருந்தால் இதற்குள் 50 வழக்குகள் ஆவது பதிவு செய்யப்பட்டிருக்கும். யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.
ஊழலை போல் சகிக்க முடியாது
ஊழலை எப்படி சகித்துக் கொள்ள முடியாதோ அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, ஏற்கனவே நடிகை கஸ்தூரி, எச் ராஜா, அண்ணாமலை போன்றோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் பொன்முடி
ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் தண்டனையும் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை தவறாக பயன்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட சலுகை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடலாம் எனவும் குறிப்பிட்டார்.
வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
அதனால் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா இல்லையா வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் ஏன் என்பது குறித்து டிஜிபி காணொளி காட்சி மூலமாகவோ அல்லது அரசு தலைமை வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை மாலை 4: 45 மணிக்கு தள்ளி வைத்திருந்தார்.












Click it and Unblock the Notifications