விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கான தடை நீக்கம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விஷால் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் மார்க் ஆண்டனி படத்திற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி P.T.ஆஷா முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யவில்லை, 15 கோடி ரூபாயை இதுவரை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை, தன்னிடம் நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்த அதே நாளில் ஒரு கோடி ரூபாயை மினி ஸ்டூடியோவிடம் பெறப்பட்டுள்ளது, இது நீதிமன்றத்துக்கு தவறான தகவலை தெரிவிப்பது என, நடிகர் விஷாலின் செயல்பாடு குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார் .
இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் நிதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஏப்ரலில் 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய உத்தரவை உறுதி செய்த பிறகும், சொத்து விவரங்கள் குறித்து மனுத்தாக்கல் செய்யாதது ஏன் எனவும், மினி ஸ்டூடியோ தாக்கல் செய்த வங்கிக் கணக்கு விவரங்களில் 1 கோடியே 61 லட்ச ரூபாய் விஷால் வங்கிக் கணக்கில் இருந்ததாக கூறப்பட்டுள்ளதே எனக் கேள்வி எழுப்பினார்.
மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளது. படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications