நம்பியார் குடும்பத்திலும் பிரச்சனை.. மகள் VS பேரன்! விருதுகள், புகைப்படங்கள் யாருக்கு? ஹைகோர்ட் ஆணை
நடிகர் நம்பியாரின் பொருட்கள், விருதுகள், ஓவியங்களை கணக்கிட ஆணையரை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
சென்னை: மறைந்த நடிகர் நம்பியாரின் அறைகலன்கள் மற்றும் சபரிமலை கோயில் ஐயப்பன் ஓவியங்களை கணக்கிட வழக்கறிஞர் அல்லது ஆணையரை நியமிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முஹம்மது சித்திக் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
நம்மில் பலருக்கு எம்ஜிஆர் என்றவுடன் நினைவுக்கு வருவது நம்பியார்தான். அந்த கால தமிழ் திரைப்படங்களில் எம்ஜிஆரின் மிரட்டலான நடிப்பிற்கு இணையாக தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி எடுத்து இருப்பார் நம்பியார்.
வயதான பிறகு நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களை கவர்ந்த நம்பியார் கேரள மாநிலத்தில் பிறந்தவர். 1935 ஆம் ஆண்டு பக்தா ராமதாஸ் படத்தில் அறிமுகமான இவர் கடைசியாக 2006 ஆம் ஆண்டு விஜயகாந்தின் சுதேசி திரைப்படத்தில் நடித்தார்.

நம்பியார் மரணம்
கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னுடைய 89 வது வயதில் இவர் சென்னையில் காலமானார். இவருக்கு சுகுமாரன், மோகன் ஆகிய மகன்களும் சினேகா என்ற மகளும் உள்ளன. சுகுமாரன் நம்பியார் பாஜகவில் முக்கிய பிரமுகராக இருந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சுகுமாறன் காலமானார். இவரது மறைவுக்கு முன்பே நம்பியாரின் சொத்துக்களை பிள்ளைகள் பிரித்துக்கொண்டார்கள்.

நம்பியார் பொருட்கள்
இதற்கிடையே சுகுமாறனின் மறைவுக்கு பிறகு சென்னை கோபாலபுரத்தில் உள்ள நம்பியாரின் வீட்டை மறுக்கட்டமைப்பு செய்ய அவரது பேரன் முடிவு செய்து அந்த வீட்டில் இருந்த பொருட்களை அத்தையிடம் வழங்கியதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு அந்த பொருட்களை திருப்பி தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வரை சென்று உள்ளது.

நம்பியார் பேரன்
சுகுமாரனின் மகனும் நம்பியாரின் பேரனுமான சித்தார்த் சுகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார். அதில், தன்னுடைய அத்தை சினேகாவிடம் நம்பியார் பயன்படுத்திய விருதுகள், கோப்பைகள், சபரிமலை ஐயப்பனின் ஓவியங்கள், புகைப்படங்கள் அனைத்தும் உள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.

அத்தை மீது புகார்
ஒரே குடும்பமாக இருந்தபோது நம்பியாரின் பொருட்களை வைத்து இருந்ததாகவும், அதை தன்னிடம் வழங்குவதாக அத்தை சினேகா தன்னிடம் சம்மதம் தெரிவித்த நிலையில், அவர் தனியாக வீடு வாங்கி சென்ற பிறகு அவற்றை தர மறுப்பதாகவும், தனக்கு அந்த பொருட்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவை கூறி இருந்தார்.

ஆய்வு செய்ய உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நம்பியார் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்வதற்கு ஆணையர் மற்றும் வழக்கறிஞரை நியமிப்பதாக இடைக்கால உத்தரவி பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நம்பியார் மகள் சினேகா மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். தன்னுடைய தந்தை பயன்படுத்திய பொருட்கள் தனக்கே சொந்தம் என அவர் கூறி இருந்தார்.

தடை விதிக்க மறுப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முஹம்மது சித்திக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நம்பியாரின் பொருட்களை ஆய்வு செய்ய வழக்கறிஞர் மற்றும் ஆணையரை நியமிக்கும் தனி நீதிபதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இதற்கென புதிதாக ஒரு ஆணையரை நியமித்து அவர்கள் நம்பியாரின் வீட்டில் ஆய்வு செய்வார்கள் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.












Click it and Unblock the Notifications