காதலனுடன் ஜாலி டூர்.. பெற்றோருக்கு விபூதி அடிக்க.. சென்னை போலீஸை சுத்தலில் விட்ட கல்லூரி மாணவி
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கல்லூரியில் படித்து வந்த மாணவி, தன்னுடைய காதலனுடன் சுற்றியதை பெற்றோரிடம் மறைப்பதற்காக கடத்தல் நாடகம் நடத்தி இருக்கிறார். போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள்..இங்கு ஒரு பெண் காதலனுக்காக பெற்றோருக்கே விபூதி அடிக்க பார்த்துள்ளார். அதற்காக போலீஸையே அந்த மாணவிசுத்தலில் விட்டிருக்கிறார். என்னம்மா இப்படி பண்றிங்களேமா என்று போலீசார் நொந்து போய்.. எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

யார் அந்த மாணவி, எந்த ஊர் என்பதை இப்போது பார்ப்போம். சென்னை தேனாம்பேட்டையில் வசிக்கிறார் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் டிகிரி படித்து வந்துள்ளார். நேற்று மாணவி கல்லூரி செல்வதாக தன் அம்மாவிடம் கூறிவிட்டு வெளியில் போய் இருக்கிறார். ஆனால் வழக்கத்தை விட மிகவும் கால தாமதமாக வீட்டுக்கு வந்திருக்கிறார்.
இதனால் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். பெற்றோரை சமாளிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கினார் அந்த மாணவி. அப்போது திடீரென்று அந்த மாணவி கூறிய தகவல் பெற்றோரை அதிரவைத்தது. இது தொடர்பாக மாணவி கூறுகையில், "நான் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றேன், வழியில் ஆட்டோவை மறித்து 2 மர்ம நபர்கள் ஏறினார்கள்.. அந்த நபர்கள் மயக்க மருந்தை தனது முகத்தில் தெளித்து ஆட்டோவில் என்னை கடத்தினார்கள். பின்னர் சென்னை புறநகர் பகுதியில் தன்னை இறக்கி விட்டார்கள்" என்று கூறியிருக்கிறார்.
கடத்திட்டு போய் என்ன பண்ணுணாங்க என்று கேட்ட போது சரியாக பதில் அளிக்கவில்லை. பெற்றோரிடம் மழுப்பலாகவே பேசியிருக்கிறார்.
இதனால் பயந்து போன பெற்றோர் தனது மகளை அழைத்துக் கொண்டு தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு போய் இருக்கிறார்.
மேலும் அங்கிருந்த போலீசாரிடம் தனது மகளான கல்லூரி மாணவியை சிலர் கடத்தி சென்று நீண்ட நேரம் கழித்து இறக்கிவிட்டதாக மகள் கூறிய கதையை அப்படியே அவரது அம்மா கூறியிருக்கிறார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்கள். கோடம்பாக்கம் பகுதியில் இருந்து மாணவி கடத்தப்பட்டதாக கூறியதால் கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் அளிக்கும்படி தேனாம்பேட்டை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக மாணவியின் பெற்றோர், கோடம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை பற்றி சொல்லி புகார் கொடுத்தார்கள். இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பெண் சப்-இன்ஸ்பெக்டரும் மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவி அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவர் சந்தேகம் அடைந்தார். அதன்பிறகு பெற்றோரை வெளியே நிற்க சொல்லிவிட்டு மாணவியிடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தனியாக விசாரித்தார்கள்.
அப்போது மாணவி கூறிய தகவல் தவறானது என்பதும், கல்லூரிக்கு போகாமல் காதலனுடன் சுற்றியதை மறைப்பதற்காக மாணவி பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியதும் அம்பலமாகியது. இதைடுத்து பெற்றோரிடம் மகள் செய்த காரியத்தை கூறிய போலீசார், மாணவியை எச்சரித்து புத்திமதி கூறி அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications