சென்னையில் மாரத்தான் 2023 தொடங்கியது.. எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்? முழு விவரம்
சென்னை: சென்னையில் மாரத்தான் போட்டிகள் நேப்பியர் பாலத்தில் தொடங்கியுள்ளன. இந்த போட்டியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகள் சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாரத்தானின் 11 ஆவது பதிப்பு இன்று தொடங்கியது. முழு மாரத்தான் (42 கி.மீ.), பெர்ஃபெக்ட் மைலர் (32 கி.மீ. ), அரை மாரத்தான் 21 கி.மீ. மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ 20 லட்சமாகும். முதல்முறையாக இந்த போட்டியில் பார்வை குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 பிளேடு ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 50 சக்கர நாற்காலிகள் ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னை ரன்னர்ஸ்
இந்த போட்டிகள் சென்னை ரன்னர்ஸ் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி நாள் டிசம்பர் 15 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. 10 கி.மீட. ஓட்டத்தில் பங்கேற்ற நுழைவு கட்டணமாக ரூ 1,250 ஆகும். மற்ற 3 பிரிவுகளில் போட்டியிட் ரூ 1.475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை நேப்பியர் பாலம்
இந்த போட்டிகள் சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. இதில் 10 கிமீ. ஓட்டம் மட்டும் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடைகிறது. மற்ற 3 பிரிவுகளின் பந்தயங்களும் ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது. இந்த போட்டிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அது போல் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் இந்த போட்டியில் கலந்து கொண்டார்.

முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நடைபெற்று வரும் மாரத்தான் போட்டிகளையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய கைலாஷிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது. காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதி இல்லை. மத்திய கைலாஷ் காந்தி மண்டபத்தில் இருந்து வருவோர் எல்பி சாலை சாஸ்திரி நகர் வழியாக செல்லலாம்.

மாரத்தான் - சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பெசன்ட் நகர் 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஆல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும். ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.

பெசன்ட் நகர் பேருந்து நிலையம்
மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும். அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜிவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications