கோடை வெயில் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இந்த 13 மாவட்டங்களில் நல்ல மழை காத்திருக்கு.. கவனமா இருங்க
தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை: மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மிதமான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முடிந்தது முதலே வறண்ட வானிலையே நிலவியது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் பிப். மாதம் முதலே வெயில் அதிகமாகவே இருந்தது.
வரும் கோடைக் காலத்தில் வெப்பம் மேலும் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்தச் சூழலில் வெயிலுக்கு இதமாகப் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெயில்
தமிழ்நாட்டில் இப்போதும் பல இடங்களில் வெயில் அதிகமாகவே உள்ளது. அதிகபட்சமாகச் சேலத்தில் வெப்பம் 37.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதேபோல நீலகிரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வெப்பம் இயல்பு நிலையைக் காட்டிலும் அதிகமாகவே இருந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும் நிலையில், நேற்றிரவு வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

எங்கெல்லாம் மழை
குறிப்பாகச் சென்னையில் பல இடங்களில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் மார்ச் 19முதல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் 13 மாவட்டங்களில் - திருவள்ளூர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூரில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை
அதேபோல 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழை
கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் தாலுகாவில் 40 மிமீ மழையும், வால்பாறை உள்ளிட்ட இடங்களில் 20 மிமீ மழையும் பெய்துள்ளது. அதேபோல வரும் நாட்களில் மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிகையும் விடுக்கப்படவில்லை. கோடைக் காலம் தொடங்கும் முன்பே வெப்பம் அதிகரித்தது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த கோடை மழை மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications