சென்னை மெட்ரோ பயணிகளே கவனம்.. ஆகஸ்ட் 1 முதல் பயண அட்டையில் மாற்றம்.. டாப்அப்பை மாற்றுவது எப்படி?
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுவதுமாக மாறுகிறது. இதனால் தற்போது நடைமுறையில் உள்ள சென்னை மெட்ரோ கார்டுகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செயல்படாது. அந்த கார்டில் உள்ள டாப்அப்பை சிங்கார சென்னை கார்டுக்கு மாற்றம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வாய்ப்பு வழங்கி உள்ளது.
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கி மலை முதல் சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மக்கள் மெட்ரோ ரயில்களில் விரைவாக பயணம் செய்து வருகின்றனர். தினமும் இந்த மெட்ரோ ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. புதிய மெட்ரோ ரயில் மார்க்கங்களில் சோதனை ஓட்டம், புதிதாக சுரங்கம் தோண்டும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை போல் கார்டு மூலமாக பயணிக்கும் வசதியும் உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சார்பில் வழங்கப்பட்டுள்ள கார்டை டாப்அப் செய்திருந்தால் போதும். அதனை பயன்படுத்தி டிக்கெட் எடுக்காமல் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். இதன்மூலம் கார்டில் இருந்து கட்டணம் எடுத்து கொள்ளப்படும். தற்போது இந்த கார்டை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தற்போது நடைமுறையில் இருந்து சென்னை மெட்ரோ கார்டு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ கார்டை கைவிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சிங்கார சென்னை அட்டைக்கு முழுமையாக மாறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC Card - சிங்கார சென்னை அட்டை) மாற்றம்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில்களில் பயணிக்க CMRL பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (NCMC Card -சிங்கார சென்னை அட்டை) அறிமுகப்படுத்தியது. 01.08.2025 முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் CMRL பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. QR பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும். பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, CMRL பயண அட்டையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை (NCMC) எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு (NCMC) மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications