100 ரூபாய் போதும்.. நாள் முழுக்க டிரவல் பண்ணலாம்.. சென்னை மெட்ரோவில் புதிய வசதி.. பயணிகளுக்கு குஷி
சென்னை: சென்னை மெட்ரோவில் வார இறுதி நாட்களில் ரூ.100 கட்டணம் செலுத்தி பயண அட்டையை பெற்று நாள் முழுக்க பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்க ஏதுவாக மெட்ரோ ரயில்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை சிட்டிக்குள் கோயம்பேடு, விமான நிலையம் போன்ற இடங்களுக்கு சாலைகளில் செல்ல வேண்டுமானால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.

மெட்ரோ ரயில்: பீக் நேரங்களில் இன்ச் இன்ச் ஆக வாகனங்கள் நகரும் என்று சொல்லும் அளவுக்கு டிராபிக் இருக்கும். இதனால் அலுவலகத்திற்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியுமா என கடிகாரத்தை பார்த்தபடியே சிக்னல்களில் காத்திருப்பார்கள். சிட்டிக்குள் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக மெட்ரோ ரயில்கள் தற்போது இயங்கி வருகின்றன.
இரண்டாம் கட்ட திட்ட பணி: தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாதவரம் - சோழிங்கநல்லூர், மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரை இரண்டாம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
பயணிகள் ஆர்வம்: மெட்ரோ ரயில்களில் பயணிக்க தற்போது பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் இந்த புதிய வழித்தடம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலை பொறுத்தவரை பயணிகளை கவர பல்வேறு நடவடிக்கைகளையும் சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்து வருகிறது. இதனால் மெட்ரோரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வார இறுதி நாட்களில்: கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விமான நிலையம், புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வகையில் சிறிய பேருந்துகளும் தற்போது இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தான் வார இறுதி நாட்களில் பயணிகளை கவரும் விதமாக மெட்ரோ நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரூ.100 மட்டுமே: இதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.100 செலுத்தி சுற்றுலா அட்டையை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். நாள் முழுவதும் மெட்ரோ ரயிலில் இந்த அட்டையை பயன்படுத்தி பயணம் செய்ய முடிய்ம். இந்த அட்டையை பெற ரூ.150 செலுத்த வேண்டும். பயணம் முடிந்ததும் அடையை திருப்பிக் கொடுக்கும் போது 50 ரூபாய் திருப்பி அளிக்கப்படும். மெட்ரோ ரயிலில் பயணிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications