கோவில்பட்டி பயணிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நாகர்கோவில் வந்தே பாரத்! எவ்வளவு நாள் ஏக்கம் தெரியுமா!
சென்னை: சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நெல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாகர்கோவில் வரை இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயத்தில் நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலால் கோவில்பட்டி பயணிகளின் பல நாள் ஏக்கமும் நிறைவேறி இருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக இரண்டு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரையிலும், மதுரையில் இருந்து பெங்களூர் வரையிலும் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டும் மிக முக்கியமான வழித்தடங்கள் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் தமிழகத்தை பொறுத்தவரை நெல்லை வரை ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், நாகர்கோவில் வரை வந்தே பாரத் சேவையை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இன்று முதல் நிறைவேறியுள்ளது. இன்னொரு பக்கம் இந்த வந்தே பாரத் ரயில், கோவில்பட்டி பயணிகளின் நீண்ட நாள் ஏக்கத்தையும் நிறைவேற்றி இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்..
சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் (எண் 06067), மறுமார்க்கத்தில் நாகர்கோவில் முதல் சென்னை எழும்பூர் (06068) வரையிலான வந்தே பாரத் ரயில், வாரத்தில் 4 நாட்கள் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் நின்று சென்றது. ஆனால், எழும்பூர் - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லாது.
இதன் காரணமாக சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிரந்தரமாக நின்று செல்வதை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்தான், இன்று பிரதமர் மோடியால் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை (20627-20628) கோவில்பட்டியில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் புதன் கிழமை மட்டும் இயங்காது.
அதிகாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். பிற்பகல் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடைகிறது. மறுமார்க்கத்தில் நாகர்கோவில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில் காலை 11.35 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மாலை 3.53 மணிக்கு கோவில்பட்டி வந்தடையும் வகையில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கும் இந்த ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது பயணிகள் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications