இன்ஸ்டாவில் Ready to Wear சேலை பிசினஸ் செய்த நங்கநல்லூர் நாகலட்சுமி கொலையில் திடுக் தகவல்கள்!
சென்னை: சென்னை நங்கநல்லூரில் இன்ஸ்டா, யூடியூபில் பிரபலமான Ready to wear சேலைகளை தயார் செய்யும் பிசினஸ் செய்து வந்த நாகலட்சுமி கொலையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை நங்கநல்லூர், அண்ணா நகரில் Sree Sai Silks என்ற கடையை நடத்தி வந்தார் நாகலட்சுமி (41). இவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர். அங்குள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்திருந்தார்.

சென்னை மிகவும் பிடிக்கும் என்பதற்காகவே சென்னையை சேர்ந்த சுப்பிரமணி (51) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பரத்வாஜ், சைலேஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். இளைய மகன் சென்னை மதுரவாயலில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இந்த நிலையில் நாகலட்சுமிக்கு ஆடைகள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.
இதனால் சேலை விற்பனை கடையை தொடங்கினார். பட்டுச் சேலைகளை குறைந்த விலைக்கு கொடுத்து வந்தார். மேலும் ஒரு சேலையை ரெடிமேடு போல் மாற்றி கொடுத்து வந்தார். அவரிடம் ரெடிமேடு சேலை வாங்கினால், மற்றொரு சேலையை இலவசமாக ரெடிமேடாக மாற்றிக் கொடுத்து வந்தார்.
இவரது கடைக்கு மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். இந்த நிலையில் நாகலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் மனைவியை கணவர் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம், யூடியூபில் சேலையை எப்படி கட்டுவது, ரெடிமேட் சேலையை எப்படி தைப்பது போன்றவைகளையும் சொல்லிக் கொடுத்து வந்த நிலையில் அவர் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில் போலீஸார் விசாரணையில் கூறியிருப்பதாவது: சுப்பிரமணிக்கு வேலை ஏதும் இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். தன்னை விட மனைவி அதிகமாக பணம் சம்பாதிக்கிறார் என்ற ஈகோவும் அவருக்கு எழுந்தது.
அது போல் இன்ஸ்டாவில் நாகலட்சுமி பிரபலமாவதிலும் அவருக்கு சுத்தமாக விருப்பமில்லை. இந்த நிலையில் கணவருக்கு, நாகலட்சுமி ஹோட்டல் பிசினஸ் வைத்துக் கொடுத்தாராம்.
அதையும் அவர் சரியாக பார்த்துக் கொள்ளாததால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அவர் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நங்கநல்லூரில் இருந்து சுப்பிரமணி, அவரது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டாராம்.
அங்கும் அவரது செலவுக்கு நாகலட்சுமிதான் பணம் அனுப்பி வந்ததாக சொல்லப்படுகிறது. இடையே சுப்பிரமணி, ஓரிரு நாட்கள் நங்கநல்லூர் வீட்டில் தங்கினாலும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் சுப்பிரமணி, நாகலட்சுமியை சந்திக்க நங்கநல்லூருக்கு வந்துள்ளார்.
அப்போதும் மீண்டும் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நாகலட்சுமி, "நீங்கள் மீண்டும் மதுரைக்கே சென்று விடுங்கள்" என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, வெளியே சென்று அரிவாளை வாங்கி வந்து நாகலட்சுமியை வெட்டி கொன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரது உடல்களும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மூத்த மகன் ரஷ்யாவில் இருந்து வந்ததும் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
பட்டுச் சேலைகளை குறைந்த விலைக்கு கொடுத்து வந்த நிலையில் முதல் நாளே ரூ 2 லட்சம் லாபம் பார்த்ததால், அந்த கடையை மேலும் மேலும் நாகலட்சுமி வளர்த்துள்ளார். அவருக்கு கீழ் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்துள்ளார்.
கடைகள் வளர்ச்சிக்காக நாகலட்சுமி மிகவும் பாடுபட்டுள்ளார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நாகலட்சுமி அன்பாக பேசுவாராம். வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேலைகளை கொடுப்பாராம். அதிக விலைக்கு சேலைகளை விற்க வேண்டும் என நினைக்க மாட்டாராம். இப்படியாக நாகலட்சுமி குறித்து வாடிக்கையாளர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
பல்வேறு தரப்பினருக்கு வேலை வாய்ப்பை கொடுத்து, இது போல் சேலை வியாபாரம் எப்படி செய்வது என கற்றுக் கொடுத்த நாகலட்சுமியை வெறும் தாழ்வு மனப்பான்மைக்காக கொன்று குவித்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப நலனுக்காக பாடுபட வேண்டிய சுப்பிரமணி, வேலை இல்லாமல் சுற்றினாலும் தனது மகன்களை நல்ல வகையில் படிக்க வைக்க நாகலட்சுமியின் துணிக் கடை பிசினஸ் கை கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications