“நள்ளிரவு வௌியே வருவதால்தான் Harras நடக்குது..” சென்னை போலீசார் சொன்ன புது காரணம்
சென்னை: நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சென்னை திருவான்மியூர் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு நாய்களுக்கு சாப்பாடு வைக்க வந்த பெண்ணை போலீசார் எச்சரித்துள்ள சம்பவம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பான வீடியோவில் காவலர் பேசியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
திருவான்மியூர் கடற்கரையில் நேற்றிரவு 12 மணிக்கு தெரு நாய்களுக்கு உணவு கொடுக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார், இந்த நேரத்திற்கு ஏன் வெளியே வருகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அப்பெண் பதிலளிக்க, அதை ஏற்காத போலீசார், அப்பெண்ணுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

போலீசார் கூறிய அறிவுரை குறித்து சோஷியல் மீடியாக்களில் பரவலாக விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறீர்கள்? தெருநாய்களுக்கு உணவு கொடுக்க யார் அனுமதித்தது? இவ்வளவு நாய்கள் ஓரிடத்தில் குவிந்து இருக்கிறதே, அதற்கு யார் பதில் சொல்வது? என அடுத்தடுத்த கேள்விகளை போலீசார் கேட்கின்றனர்.
இதற்கு அப்பெண், "மாநகராட்சியில் மூலம் முறையாக கருத்தடை செய்யாததால்தான் நாய்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகரித்திருக்கிறது. நாய்கள் இங்கு வர காரணம் நாங்கள் கிடையாது, மாநகராட்சிதான். நாங்கள் சாப்பாடு வைக்கத்தான் வந்தோம். வெளியிலிருந்து யாராவது வந்து சீண்டலில் ஈடுபடுவார்கள் என்று பயந்துக்கொண்டிருக்கும்போது, நீங்களே இப்படி செய்யலாமா?" என கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு போலீசார் தரப்பில், "நள்ளிரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றுதானே சொல்கிறோம். நாங்கள் என்ன உங்களை செய்தோம்? நள்ளிரவு நேரத்தில் வெளியில் வருவதால்தான் சீண்டல் சம்பவங்கள் நடக்கிறது" என்று கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு அப்பெண், "நள்ளிரவு நேரத்திற்கு முன்னர் வந்தால் கடற்கரையில் ஆட்கள் இருக்கிறார்கள். எனவேதான் 12 மணிக்கு வருகிறேன். நாய்களுக்கு உணவு கொடுக்க நான் வருவேன்" என்று உறுதியாக கூறு, "அப்படி வந்தால் சீண்டல் சம்பவங்கள் நடக்கத்தானே செய்யும்" என்று காவல் ஆவேசமாக பதிலளித்துள்ளார். "பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை குற்றவாளிகளாக ஆக்காதீர்கள்" என அப்பெண் கூற, அனைத்து சம்பவத்தையும் போலீசாரும், இளம்பெண்ணும் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வீடியோதான் சோஷியல் மீடீயாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக இரவு 12 மணிக்கு வெளியே வருவதால்தான் வன்கொடுமை, சீண்டல் சம்பவங்கள் நடக்கிறது என்று பொத்தாம் பொதுவாக காவல்துறையினர் பேசுவது, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் நடைமுறை என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications