அடுத்தடுத்து 7 இடங்களில் செயின் பறிப்பு.. 3வது குற்றவாளியை ஆந்திரா சென்று தூக்கிய சென்னை போலீஸ்
சென்னை: தலைநகர் சென்னையில் இன்று காலை அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக இருவரைக் காலையிலேயே போலீசார் கைது செய்திருந்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரையும் இப்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை ஒட்டுமொத்த சென்னையையும் அதிர வைக்கும் வகையில் சினிமா பாணியில் செயின் திருட்டு சம்பவம் நடந்தது. வெறும் சில மணி நேர இடைவெளியில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதிகாலையிலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மர்ம நபர்கள்
நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், கடைக்குச் சென்றவர்களைக் குறிவைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொஞ்ச நேர இடைவெளியில் அடுத்தடுத்து 8 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளனர். இது குறித்த தகவல் கிடைத்தவுடன் களத்தில் இறங்கிய சென்னை போலீஸ் துரிதமாகச் செயல்பட்டது. சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட பைக் கர்நாடக பதிவு எண் கொண்டது என தெரிய வந்தது. மேலும், அவர்கள் மாஸ்க் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகல்களை வைத்து விசாரணையைத் தொடங்கிய போலீசார் இரு வடமாநில இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்கள் விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த நிலையில், விமான நிலையத்திற்குள்ளேயே புகுந்து போலீசார் கைது செய்தனர்.
மூன்றாவது நபர் கைது
இதற்கிடையே சென்னையில் இன்று காலை நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாவது நபரையும் இப்போது போலீசார் பிடித்துள்ளனர். அந்த நபர் ரயிலில் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், போலீசார் அவரை வளைத்துப் பிடித்துள்ளனர். காலையில் கைதான இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த மூன்றாவது நபரைக் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா சென்று தூக்கிய போலீசார்
அவர் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது தான் ஆந்திராவின் நெல்லூர் ரயில் நிலையத்தில் வைத்து சென்னை போலீசார் அவரை பிடித்துள்ளனர். காலையில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளையும் சில மணி நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்த சென்னை போலீசாரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
அடுத்தடுத்து செயின் பறிப்பு
இன்று காலை முதலில் திருவான்மியூர் இந்திரா நகர் பகுதியில் காலை 6.00 மணியளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். அதேபோல கிண்டியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடமும் 5 சவரன் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் பகுதியில் காலை 7 மணியளவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறித்துள்ளனர்.
தொடர்ந்து வேளச்சேரியில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு நடந்துள்ளது. மேலும், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனை அருகே உள்ள கடைக்கு முன்பு குப்பையைப் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 4 சவரன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இப்படி சில மணி நேரத்தில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் நடந்த செயின் பறிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியது.












Click it and Unblock the Notifications