"வட மாநில தொழிலாளர்கள்" வதந்தி பரப்பிய பீகார் பாஜக.. ட்விட்டர் கணக்கை முடக்க சென்னை போலீஸ் கடிதம்!
பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க சென்னை போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்தி விவகாரத்தில் பீகார் மாநில பாஜகவின் ட்விட்டர் கணக்கை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதேபோல் பொய்யான தகவலை பரப்பியதாக பீகார் மாநில பாஜக ட்விட்டர் கணக்கு மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவதூறாக பரவி வருகிறது.
அதேபோல் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு புறப்படும் வடமாநில தொழிலாளர்களை, அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி வருவதாகவும் வதந்திகள் பரவியது.

வட மாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற பிறகே இது தொடர்பான வதந்திகள் பெரிய அளவில் வெளியாகியது. இதனால் அரசியல் கட்சிகளின் பின்னணி இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது. அந்த கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

பாஜக நிர்வாகி
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பொய்யான செய்திகளை பரப்பியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், டைனிக் பாஸ்கர் ஆசிரியர் மற்றும் பீகாரைச் சேர்ந்த முகமது தன்வீர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், வட மாநில தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பியது பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களே என்பது அம்பலமாகியது.

விரைந்த தனிப்படை
இதனைத் தொடர்ந்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவை கைது செய்ய 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். அதேபோல் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய பத்திரிகையாளர்களை கைது செய்யவும் தமிழ்நாடு போலீசார் பீகாரில் களமிறங்கியுள்ளனர்.

பீகார் பாஜக
இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி விவகாரத்தில் பீகார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல் பரப்பியதாக பீகார் பாஜக சமூக வலைதள கணக்கு மீதும் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications