சென்னை மக்களே எந்த பகுதிக்கு போறீங்க! இன்று முதல் "டேக் டைவர்ஷன்".. போக்குவரத்து துறையின் உத்தரவு
சென்னை: சென்னையில் இன்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி , சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரேஸிங் புரமோஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து ரேசிங் சர்கியூட் பார்முலா 4 கார்பந்தயம் போட்டியை நடத்தவுள்ளது.

அதன்படி சென்னையில் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில், டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. தெற்காசியாவில் முதல்முறையாக ஸ்ட்ரீட் சர்க்கியூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடத்தப்படுகிறது.
பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிலையில் பார்முலா 4 பந்தயத்திற்கான போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 09.12.2023 மற்றும் 10.12.2023 ஆகிய நாட்களில், சென்னை தீவுதிடல் மைதானத்தை சுற்றி நடத்துகிறது.
இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகள் பந்தயச் சுற்றுகளாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதற்கேற்ப கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் இன்று (17.11.2023) இரவு முதல் 01.12.2023 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
கொடி மரச் சாலை :
போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவை ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை வழியாக பாரீஸ் கார்னர் வழியாக சேர வேண்டிய இடத்தை சென்றடையலாம்.
அதேசமயம், முத்துசாமி பாலத்தில் இருந்து கொடிப் மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும். அண்ணாசாலையில் (பல்லவன் சாலை சந்திப்பு முதல் மண்ட்ரோ சிலை வரை), சுவாமி சிவானந்தா சாலையில் (பெரியார் சிலை முதல் நேப்பியர் பாலம் வரை) மற்றும் காமராஜர் சாலையில் (நேப்பியர் பாலம் முதல் போர் நினைவிடம் வரை) ஆகிய இடங்களில் சாலையில் குறுகலாக்கப்பட்டாலும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லும்.
இவ்வாறு குறுகலாக்கப்பட்ட சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது அவைகள் பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக திருப்பி விடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications